Published : 01 Aug 2025 04:24 AM
Last Updated : 01 Aug 2025 04:24 AM
புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் மடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான விமர்சனம் செய்த நிலையில் அது உண்மைதான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அமெரிக்கா-இந்தியா இடையே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததை யடுத்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள். கச்சா எண்ணெய் வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய பொருளாதாரம் செயலிழந்து விட்டது என்ற கடுமையான விமர்சனத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வைத்துள்ளார். வரி விதிப்பை அறிவித்த சில மணி நேரங்களில் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், ‘‘ரஷ்யாவுடன் இந்தியா வைத்துள்ள உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே மிக அதிகமாக உள்ளது. எனவேதான் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வணிகத்தையே செய்து வருகிறோம். அதேநேரம், ரஷ்யாவுடன் அமெரிக்க வர்த்தக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யாவும் செயலிழந்துபோன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்” என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய பொருளாதாரம் செயலிழந்துபோய்விட்டது என்று ட்ரம்ப் கூறிய கருத்து உண்மையானதுதான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் செயலிழந்துவிட்டது என்பது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைத் தவிர நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை முற்றிலும் அழித்துவிட்டது. இந்த உண்மையை ட்ரம்ப் கூறியதில் எனக்கு மகிழ்ச்சி. கோடீஸ்வரர் கவுதம் அதானிக்கு உதவுவதற்காக பாஜக இந்திய பொருளாதாரத்தையே அழித்துவிட்டது.
ஒருபுறம் நாங்கள் ஒரு சிறந்த வெளியுறவுக் கொள்கையை கொண்டுள்ளோம் என்று வெளியுறவு அமைச்சர் உரை நிகழ்த்துகிறார். மறுபுறம் அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. அடுத்து சீனா உங்கள் பின்னால் உள்ளது. நீங்கள் உலகம் முழுவதும் பிரதிநிதிகளை அனுப்பும்போது எந்தநாடும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. நாட்டை எப்படி வழிநடத்துவது என்று அவர்களுக்கு தெரியவில்லை.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை நான்தான் செய்தேன் என்று டிரம்ப் 30 முறை கூறியுள்ளார். இந்தியாவின் ஐந்து விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறினார். இப்போது 25 சதவீத வரியை நிர்ணயிப்பேன் என்று ட்ரம்ப் கூறுகிறார். பிரதமர் மோடியால் ஏன் இதற்கு பதிலளிக்க முடியவில்லை? உண்மையான காரணம் என்ன? யாருடைய கட்டுப்பாட்டில் அதிகாரம் உள்ளது? அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பிரதமர் மோடி பணியாற்றுகிறார். அதானிக்கு உதவ இந்திய பொருளாதாரத்தை அவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT