Last Updated : 31 Jul, 2025 06:40 PM

1  

Published : 31 Jul 2025 06:40 PM
Last Updated : 31 Jul 2025 06:40 PM

Bihar SIR | தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி பேரணி செல்ல இண்டியா கூட்டணி திட்டம்!

டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல், இந்த விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் நாள்தோறும் போராட்டங்களை இண்டியா கூட்டணி எம்பிக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், இண்டியா கூட்டணியின் கோரிக்கையை ஏற்க பாஜக மறுத்து வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை. இதை தேர்தல் ஆணையம் பல பத்தாண்டுகளாக செய்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள். இதில் அவர்களின் சொந்த நலன் அடங்கி இருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு கண்டிக்கத்தக்கது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோருவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு எதிராக விவாதிப்பதற்கான அழைப்பு. தேர்தல் ஆணையத்துக்கு எதிரான விவாதத்தை மக்களவையால் தொடங்க முடியுமா? அரசியலமைப்பின் அமைப்பு முறையை புரிந்து கொள்ளாதவர்களிடம் விவாதிப்பதில் பயன் இல்லை" என விமர்சித்திருந்தார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது முதல்முறையாக நடப்பது அல்ல. ஏற்கனவே, 2003-ல் நடந்துள்ளது. அதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கிறது. வாக்காளர் திருத்தப்பட்டியல் குறித்து அச்சப்பட எதுவுமில்லை. ஏனெனில், அது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகலாம்.” என கூறியிருந்தார்.

இந்த பின்னணியில், இந்த விவகாரம் குறித்து இண்டியா கூட்டணி இன்று ஆலோசனை மேற்கொண்டது. காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் டெரெக் ஓ பிரையன், திமுக தலைவர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம்கோபால் யாதவ், என்சிபி (எஸ்.பி.)யின் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த ஆலோசனை தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்பது இண்டியா கூட்டணியின் முன்னுரிமை. இதில், இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, தாங்கள் இந்திய குடிமக்கள்தான் என்பதை வாக்காளரே நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்துவது ஜனநாயக விரோதமானது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இதை கருத்தில் கொண்டு, அடுத்த வாரம் இந்திய தலைமை தேர்தல் அலுவலகத்தை நோக்கி இண்டியா கூட்டணி எம்பிக்கள் பேரணியாகச் செல்வர். இவ்வாறு ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x