Published : 31 Jul 2025 02:18 PM
Last Updated : 31 Jul 2025 02:18 PM
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டது காவிக்கும், இந்துத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி என்று விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சாத்வி பிரக்யா சிங், “ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் என்றால், அதற்கு ஓர் அடிப்படை காரணம் இருக்க வேண்டும். இதை நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தேன். என்னை விசாரணைக்கு அழைத்தனர், பின்னர் கைது செய்து சித்ரவதை செய்தனர். இது என் முழு வாழ்க்கையையும் நாசமாக்கியது.
ஒரு துறவியின் வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேன். இருந்தும் என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. யாரும் எங்களுக்கு ஆதரவாக விருப்பத்துடன் நிற்கவில்லை. இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம், நான் துறவி என்பதால்தான். ஒரு சதி மூலம் அவர்கள் காவியை அவதூறு செய்தனர். இன்று காவி வெற்றி பெற்றுள்ளது. இந்துத்துவா வெற்றி பெற்றுள்ளது. குற்றவாளிகளை கடவுள் தண்டிப்பார்.” என தெரிவித்தார்.
இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரான லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித், “இந்த வழக்கில் நான் குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு எத்தகைய உறுதியுடன் பணியாற்றினேனோ அதே உறுதியுடன் மீண்டும் நாட்டுக்கும் எனது அமைப்புக்கும் சேவை செய்ய வாய்ப்பு வழங்கியதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எந்த ஒரு நிறுவனத்தையும் குற்றம் சாட்ட மாட்டேன். விசாரணை அமைப்புகள் தவறானவை அல்ல. அதில் உள்ள சில நபர்களே தவறானவர்களாக இருக்கிறார்கள். அமைப்பின் மீது பொதுமக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
வழக்கில் விடுவிக்கப்பட்ட சுதாகர் தார் சதுர்வேதியின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் சாத்வி பிரக்யா சிங் உடையது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சான்றிதழ்கள் போலியானவை. அந்த போலி சான்றிதழ்களை யார் தயாரித்தார்கள் என்பதை விசாரிக்க டிஜி-ஏடிஎஸ்-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுதாகர் சதுர்வேதியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆர்டிஎக்ஸ் குறித்து விசாரிக்கவும் டிஜி-ஏடிஎஸ்-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அனைத்து பிரிவுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT