Last Updated : 31 Jul, 2025 01:08 PM

7  

Published : 31 Jul 2025 01:08 PM
Last Updated : 31 Jul 2025 01:08 PM

சீனாவுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கான அமெரிக்காவின் முயற்சியே 25% வரி விதிப்பு - ராம் மாதவ்

ராம் மாதவ்

புதுடெல்லி: சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த இந்தியாவை பயன்படுத்த முடியாத நிலையில், இந்தியாவை பணிய வைக்கும் முயற்சியாகவே அமெரிக்கா 25% வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாஜக முன்னாள் பொதுச் செயலாளரும் இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம் மாதவ், “ஆழமான தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்காவை விட சீனா சில மாதங்களே பின்தங்கியுள்ளது. இந்தியா நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்குகிறது. சீனாவின் எழுச்சியைத் தடுக்க அமெரிக்காவுக்கு இந்தியாவால் மட்டுமே உதவ முடியும் என அந்நாட்டு நிபுணர்கள் நம்புகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் சீனாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன. இதனால், அந்த நாடுகள் அமெரிக்கா - சீனா இடையே சார்பு நிலையை எடுக்க தயங்குகின்றன. இதன் காரணமாக, சீனாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.

எனினும், மோடியை பணிய வைப்பது கடினம் என்றும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் சுயாட்சியில் உறுதியாக வேரூன்றியுள்ளது என்றும் ட்ரம்ப் காண்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் ட்ரம்ப்பின் கட்டளைகளுக்கு அமைதியாக சரணடைந்தாலும், இந்தியா அவ்வாறு அடிபணிய மறுப்பது அமெரிக்காவில் அமைதியின்மையை அதிகரிக்கச் செய்கிறது. எனவேதான், இந்தியாவை தனது வழிக்கு திருப்ப 25% வரிகள் போன்ற தீவிர நடவடிக்கைகளை ட்ரம்ப் நாடுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்காவே காரணம் என டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். எனினும், பிரதமர் மோடி இதனை ஒப்புக்கொள்ளவில்லை. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நடவடிக்கையை நிறுத்துமாறு எந்தவொரு உலகத் தலைவரும் எங்களிடம் கேட்கவில்லை என தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் பேசிக்கொள்ளவில்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூறினார்.

இந்நிலையில், இந்தியாவை பணிய வைக்கும் முயற்சியாகவே அமெரிக்கா 25% வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x