Published : 30 Jul 2025 02:20 PM
Last Updated : 30 Jul 2025 02:20 PM
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்குக் காரணம், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட திருப்திப்படுத்தும் அரசியலே. அப்போது பிரதமர் நேரு, இந்த ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடையாளம் என்று கூறினார். ஆனால் நமக்கு கிடைத்தது பயங்கரவாதமும் வெறுப்புமே. பாகிஸ்தானின் பஞ்சாப் விவசாயிகள் மீது நேருவுக்கு இருந்த அக்கறை, காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் விவசாயிகள் மீது இல்லை.
கடந்த காலங்களில் நமது நாட்டில் பெரிய பயங்கரவாத சம்பவங்கள் நடந்தபோது, நமது நாடு எவ்வாறு பதிலளித்தது என்பதை உலகம் பார்த்தது. பயங்கரவாதத்தை நாம் கண்டிப்போம், பின்னர் 3 மாதங்களில் பேச்சுவார்த்தையை தொடங்குவோம். பயங்கரவாத விஷயத்தில் இந்தியா மீதான உலகின் பார்வையை இது வடிவமைத்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 2009, ஜூலையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, பயங்கரவாதம் இரு நாடுகளையும் பாதிக்கிறது என்றும், அது கூட்டு உரையாடலை பாதிக்கக்கூடாது என்றும் நாம் ஒப்புக்கொண்டோம். பாகிஸ்தானைத் தாக்குவதை விட அதைத் தாக்காமல் இருப்பதன் மூலம் அதிக பலன்பெற முடியும் என்று நாம் முடிவு செய்திருந்தோம்.
பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க நீங்கள்(காங்கிரஸ்) அனுமதித்துவிட்டு, பின்னர் பேச்சுவார்த்தைகளை தொடங்கினீர்கள். இந்தியாவையும் பாகிஸ்தானையும் நீங்களே புகழ்ந்து பேசுகிறீர்கள். உலகம் உங்களை எப்படி தீவிரமாக எடுத்துக் கொள்ளும்?
பிரிக்ஸ், குவாட், யு.என்.எஸ்.சி போன்ற உலகளாவிய மன்றங்களில் பயங்கரவாதத்தை நாங்கள் விவாதத்துக்குக் கொண்டு வந்தோம். முதல் முறையாக, ஐ.நா. அறிக்கை டி.ஆர்.எஃப் பற்றி குறிப்பிடுகிறது. அதை உறுப்பு நாடுகள் குறிப்பிட்டுள்ளன. லஷ்கர்-இ-தொய்பாவின் உதவி இல்லாமல் பஹல்காம் தாக்குதல் நடந்திருக்க முடியாது என்று ஒரு உறுப்பினர் கூறினார். வேறொருவர், லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் டி.ஆர்.எஃப்-க்கும் இடையே இருக்கும் உறவு குறித்து எடுத்துரைத்தார். மற்றொருவர், தாக்குதலை நடத்தியது டி.ஆர்.எஃப்-தான் என்று கூறினார். டி.ஆர்.எஃப் என்பது லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பு என்றும் பஹல்காம் தாக்குதலுக்கு அதுதான் காரணம் என்றும் ஐ.நா.வில் நாங்கள் பதிவு செய்துள்ளோம்.
இந்தியா குறித்த உலகின் பார்வை இப்போது மாறிவிட்டது. இந்தியா இனி பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது என்பதை அங்கீகரித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்தியா தாக்கியது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் - இவை உலகிற்குத் தெரியும். பாகிஸ்தானுடன் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க மாட்டோம். இந்த விஷயம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விவகாரம்.
அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் பிரதமர் மோடியிடம் பேசினார். சில மணி நேரத்தில் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கும் என்று எச்சரித்தார். அத்தகைய தாக்குதலுக்கு தகுந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று மோடி கூறினார். உலகின் எந்தத் தலைவரும் இந்தியா தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சொல்லவில்லை. இது தொடர்பாக நடந்த உரையாடல்கள் எதிலும் வர்த்தகம் குறித்து பேசப்படவில்லை. ஏப்ரல் 12 முதல் ஜூன் 12 வரை பிரதமருக்கும் அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நிகழவில்லை.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் மிகுந்த தேசபக்தி மற்றும் நேர்மையுடன் தங்கள் கடமையைச் செய்தார்கள், இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்தார்கள். இந்த ஒத்துழைப்பு எதிர்காலத்தில் நீடிக்கும் என்று நம்புகிறேன்.” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT