Published : 30 Jul 2025 01:08 PM
Last Updated : 30 Jul 2025 01:08 PM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பினால் அவர் மீண்டும் முதல்வராவாரா அல்லது பாஜகவின் தேசியத் தலைவராகிறாரா என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
ராஜஸ்தான் பாஜகவின் முக்கிய மூத்த தலைவராக இருப்பவர் வசுந்துரா ராஜே. இம்மாநிலத்தில் இரண்டு முறை முதல்வராக இருந்தவர், ராஜஸ்தான்வாசிகளால் ‘மகாராணி’ என்றழைக்கப்படுகிறார். ஏனெனில், இவர் அப்பகுதியின் ராஜ பரம்பரையான சிந்தியா குடும்பத்தை சேர்ந்தவர். ராஜஸ்தானின் ஜோத்பூர் ராஜகுடும்பத்தின் மருமகளாக வந்த வசுந்தரா அதன் மகாராணியாகவும் உள்ளார்.
நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் மோடியை வசுந்தரா சந்தித்தது சர்ச்சையாகி விட்டது. சுமார் 20 நிமிடங்கள் சந்திப்பிற்கு பிறகு பிரதமர் அறையிலிருந்து வெளியே வந்த வசுந்தராவின் முகம் மகிழ்ச்சியாக இருந்தது. இதனால், அவர் மிகவும் விரும்பும் ராஜஸ்தான் முதல்வர் பதவி வசுந்தராவிற்கு மீண்டும் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இதன் பின்னணியில், தற்போதைய ராஜஸ்தான் முதல்வரான பஜன்லால் சர்மா மீது அதிருப்திகள் நிலவுகின்றன.
இவர் மாநில நிர்வாகத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கத் தயங்கி வருவதாகப் புகார்கள் உள்ளன. இந்தநிலை, ராஜஸ்தானின் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் பாதிக்கும் என பாஜக அஞ்சுவதால் மாற்றம் வரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து வசுந்தரா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவும் டெல்லி சுற்றுப்பயணத்தில் உள்ளார்.
முதல்வர் பஜன்லால் சர்மா கடந்த இரண்டு நாட்களில் மத்திய அமைச்சர்களான சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மோகன்லால் கட்டாரை சந்தித்தார். தொடர்ந்து அவர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், ராஜஸ்தான் அரசில் பெரிய மாற்றங்களுக்கான அறிகுறிகள் தெரிகின்றன. இதுவன்றி, பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவராகும் வாய்ப்பு வசுந்தராவுக்கும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தொடரும் இப்பதவிக்கு மத்திய அமைச்சர்களான சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மோகன்லால் கட்டார் போன்ற மூத்த தலைவர்களின் பெயர்களும் விவாதிக்கப்படுகின்றன. சமீபத்தில், குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இவரது பதவிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
ஏற்கெனவே, பிரதமர் மோடியின் அமைச்சரவையிலும் விரிவாக்கம் செய்வது நிலுவையில் உள்ளது. இதில், சில கூட்டணிக் கட்சிகளுக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. எனவே, ஆளும் தேசிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை வகிக்கும் பாஜகவில் மிகப்பெரிய மாற்றங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT