Published : 30 Jul 2025 12:51 PM
Last Updated : 30 Jul 2025 12:51 PM
புதுடெல்லி: பிஹார் SIR விவகாரம் நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு திரிபவர்கள்தான் (ராகுல் காந்தி) அரசியலமைப்புச் சட்டத்தை கேலி செய்கிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை. இதை தேர்தல் ஆணையம் பல பத்தாண்டுகளாக செய்து வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள். இதில் அவர்களின் சொந்த நலன் அடங்கி இருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு கண்டிக்கத்தக்கது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோருவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு எதிராக விவாதிப்பதற்கான அழைப்பு. தேர்தல் ஆணையத்துக்கு எதிரான விவாதத்தை மக்களவையால் தொடங்க முடியுமா? அரசியலமைப்பின் அமைப்பு முறையை புரிந்து கொள்ளாதவர்களிடம் விவாதிப்பதில் பயன் இல்லை: என விமர்சித்தார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது முதல்முறையாக நடப்பது அல்ல. ஏற்கனவே, 2003ல் நடந்துள்ளது. அதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளது.
தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கிறது. வாக்காளர் திருத்தப்பட்டியல் குறித்து அச்சப்பட எதுவுமில்லை. ஏனெனில், அது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகலாம்.” என தெரிவித்தார்.
இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இன்றும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை எழுப்பி கூச்சலிட்டனர். கேள்வி நேரம் முடிந்த உடன் உங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என கூறி சபாநாயகர் சமாதானப்படுத்தியதை அடுத்து அவர்கள் அமைதி அடைந்தனர்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT