Published : 30 Jul 2025 07:58 AM
Last Updated : 30 Jul 2025 07:58 AM
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அவர் பொய் பேசுகிறார் என்று சொல்ல பிரதமர் மோடிக்கு தைரியம் உண்டா என ராகுல் கேள்வி எழுப்பினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எதிர்க்கட்சிகள் பாறை போல உறுதியாக நின்று மத்திய அரசுக்கு ஆதரவை வழங்கின.
குறிப்பாக, இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே அரசை ஆதரிப்பதாக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்று உறுதியளித்ததை நினைவுகூர விரும்புகிறேன். அதேநேரம், பஹல்காமில் பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட மிருகத்தனமான தாக்குதலுக்கு கண்டனத்தையும் தெரிவித்தோம்.
ஆனால், ராணுவ நடவடிக்கைக்கு முன்பே பாகிஸ்தான் அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது இந்த விவகாரத்தில் பல கேள்விகளை எழுப்புகிறது. போர் தொடங்கும்வரை பாகிஸ்தான் மட்டும்தான் எதிரி என இந்தியா நினைத்தது. ஆனால, போர் தொடங்கிய பிறகுதான் இந்தியாவின் உண்மையான எதிரி சீனா என்று தெரிந்தது. போர் தொடர்பான பல முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா அளித்து உதவியது.
இந்தியாவில் தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருடன் உணவருந்தியது பற்றி ட்ரம்பிடம் பிரதமர் மோடி ஏன் கேள்வி எழுப்பவில்லை. உலக நாடுகள் ஏன் அதை கண்டிக்கவில்லை. இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒரே நிலையில்வைத்துதான் உலக நாடுகள் பார்க்கின்றன. இந்தியா-பாகிஸ்தான் போரை தான் மத்தியஸ்தம் செய்து தடுத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 29 முறை கூறியுள்ளார்.
அவர் ஒரு பொய்யர் என்று கூற இந்திரா காந்தியைப் போல பிரதமர் மோடிக்கு தைரியம் உண்டா? அப்படி தைரியம் இருந்தால் பிரதமர் இங்கிருந்து (நாடாளுமன்றத்தில்) சொல்லட்டும். ராணுவ நடவடிக்கைகள் உட்பட சீனா வழங்கிய தகவல்களின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா என்ன செய்யப்போகிறது?.
சீனாவும் பாகிஸ்தானும் இணைந்திருப்பது இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் மற்றும் அதற்கு உதவும் சீனாவின் வெளியுறவு கொள்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தோல்வி அடைந்துவிட்டது. இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT