Published : 29 Jul 2025 06:47 AM
Last Updated : 29 Jul 2025 06:47 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயபுராவில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த 1999-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நான் கட்சியை வழிநடத்தினேன். காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன்.
அதன் காரணமாக காங்கிரஸ் கர்நாடகாவில் உள்ள 224 இடங்களில் 132 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. எனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என பத்திரிகைகள் எழுதின.
ஆனால் தேர்தலுக்கு வெறும் 4 மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் பதவியை வழங்கினர். எனக்கு கிடைக்க வேண்டிய முதல்வர் பதவியை தராமல் ஏமாற்றி விட்டார்கள். அதன் பிறகு பலமுறை எனது முதல்வர் கனவை தடுத்துவிட்டனர். ஆனாலும் கட்சியின் நலனுக்காக தளராமல் பணியாற்றினேன்.
அதனால் அகில இந்திய அளவில் காங்கிரஸின் தலைவராக உயரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கட்சி சில நேரம் நமது உழைப்பை அங்கீகரிக்காமல் விட்டாலும், நாம் கட்சியை கைவிடாமல் உழைக்க வேண்டும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். அவரது இந்த பேச்சு, காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT