Published : 28 Jul 2025 06:42 PM
Last Updated : 28 Jul 2025 06:42 PM
புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட ஏர் இந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி என்விஎன் சோமு நாடாளுமன்றத்தில் 3 கேள்விகளை எழுப்பி இருந்தார். 1. நாட்டில் உள்ள விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது உண்மையா? 2. உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விமானப் பதுகாப்பு தணிக்கைகளில் உள்ள சிக்கல்களை ஆராய உயர் மட்டக் குழுவை அமைக்க அரசாங்கத்துக்கு திட்டம் உள்ளதா? 3. விமான விபத்து தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க ஏர் இந்தியாவுக்கு அரசாங்கம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதா? உள்நாட்டு மற்றம் சர்வதேச சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் விமானங்களின் பாதுகாப்பு தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிக்க அரசாங்கம் ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளதா? என்று கேட்டிருந்தார்.
கனிமொழி என்விஎன் சோமுவின் இந்த கேள்விகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அவர் தனது பதிலில், "அனைத்து விமானங்கள் மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்களுக்குமான விதிகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இணக்கமான முறையில் செயல்படுவதற்கான நடைமுறைகளை கண்காணிக்கும் பொறுப்பு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) உள்ளது.
வழக்கமாக மற்றும் அவ்வப்போது தணிக்கைகளை மேற்கொள்வது, நிகழ்நேர பரிசோதனைகள், இரவு கண்காணிப்பு, பராமரிப்பு நடைமுறைகளை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து விமான ஆபரேட்டர்களிடமும் மேற்கொள்ளப்படுகின்றன. டிஜிசிஏ தனது இணையதளத்தில் வருடாந்திர கண்காணிப்பு திட்டத்தை வெளியிடுகிறது. ஒவ்வொரு இயக்குநரகமும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் இத்தகைய சோதனைகளை மேற்கொள்கின்றன.
ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, விமான விபத்துக்கு காரணமாக இருந்திருக்கக் கூடிய காரணிகளை கண்டறிவதற்கான விசாரணையை மேற்கொள்ள விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர் ஜெனரல் 2017-ம் ஆண்டு விதி 11ன் கீழ் உத்தரவிட்டார்.
விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் கூடுதல் சோதனைகளை மேற்கொள்ள ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ ஜூன் 13-ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து, ஏர் இந்தியாவுக்கு சொந்தமான மொத்தமுள்ள 33 போயிங் விமானங்களில் 31 செயல்பாட்டு விமானங்களில் ஆய்வுகள் மற்றம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 8 விமானங்களில் சிறிய அளவில் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை சரி செய்யப்பட்ட பிறகு விமானங்கள் செயல்பாட்டுக்கு விடுவிக்கப்பட்டன. மீதமுள்ள 2 விமானங்கள் திட்டமிட்ட பராமரிப்பில் உள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT