Published : 28 Jul 2025 05:18 PM
Last Updated : 28 Jul 2025 05:18 PM
புதுடெல்லி: “வர்த்தகத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைதான் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 26 முறை கூறிவிட்டார். போர் நிறுத்தத்துக்கான காரணத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அறிய விரும்புகிறோம்.” என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அது தொடர்பாக அவைக்கு விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி சார்பில் விவாதத்தை தொடங்கிவைத்த மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், “பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் மக்கள் உதவி இருக்கிறார்கள். தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், மதத்தின் அடிப்படையில் மக்களை குறிவைக்கக்கூடாது என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.
யார் மீதும் வெறுப்பு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகளுக்கு எதிராக சிலர் போராடுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும்; அமைதி மட்டுமே வேண்டும் என்று ஹிமான்ஷி நர்வால் கூறி இருந்தார்.
பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை அரசாங்கத்தால் ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள். சம்பவம் நடந்து 100 நாட்களுக்கு மேல் ஆகியும் பயங்கரவாதிகள் குறித்து அரசாங்கம் ஏன் எந்த தகவலையும் வழங்கவில்லை. உங்களிடம் (அரசாங்கத்திடம்) ட்ரோன்கள், செயற்கைக்கோள்கள், பெகாசஸ் போன்றவை உள்ளன. இருந்தும், ஏன் நீங்கள் யாரையும் கைது செய்யவில்லை.
இந்த அரசு ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு கூறியது. சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்குப் பயணம் செய்ய வேண்டும் என்று ஊக்குவித்தது. ஆனால், பஹல்காம் தாக்குதலின்போது, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் உதியவற்றவர்களாக இருந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது. இப்படி ஒரு தாக்குதல் இந்த அரசாங்கத்தின் கீழ் நடந்துள்ளது. பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், முப்படைகளின் தலைவர் அனில் சவுஹான் விவரித்துள்ளார்.
அமெரிக்கா தனது வர்த்தக உறவை மையமாக வைத்து நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 26 முறை கூறிவிட்டார். இந்த பின்னணியில், போர் நிறுத்தத்துக்கான உண்மையான காரணத்தை அறிய நாங்கள் விரும்புகிறோம். போரின்போது சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடனுதவி அளிக்க ஒப்புக்கொண்டது. அதனை இந்தியாவால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? இந்தியாவின் சர்வதேச ராஜதந்திரம் என்ன ஆனது?
பயங்கரவாதத்துக்கு எதிராகவும் உண்மைக்கு ஆதரவாகவும் நாடு அரசாங்கத்துடன் நிற்கிறது. நாங்கள் எதிரி அல்ல, நாங்கள் எங்கள் நாட்டின் அரசாங்கத்துக்கும் ஆயுத படைகளுக்கும் ஆதரவாக இருக்கிறோம். ஆனால், நீங்கள் எங்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். பொய்கள் மற்றும் வஞ்சகங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்புவோம்.” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT