Last Updated : 28 Jul, 2025 03:58 PM

2  

Published : 28 Jul 2025 03:58 PM
Last Updated : 28 Jul 2025 03:58 PM

பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? - மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியது ஏன் என மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் அவர் அவையில் விரிவான பதிலளித்தார்.

மக்களவை இன்று தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகளின் அமளியால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மக்களவையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார்.

மக்களவையில் பேசிய அவர், “நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் இறையாண்மையின் அடையாளமாகும். எங்கள் நடவடிக்கைகள் முற்றிலும் தற்காப்புக்காகவே இருந்தன. ஆத்திரமூட்டும் அல்லது எல்லையை கைப்பற்றும் நோக்கங்களுக்காக அல்ல. இருப்பினும், மே 10, 2025 அன்று, அதிகாலை 1.30 மணியளவில், பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் பிற நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது. நமது எஸ்-400 ஆகாஷ் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானின் தாக்குதலை முற்றிலுமாக முறியடித்தன. இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 22 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ஆயுதப்படை ஒன்பது பயங்கரவாத தளங்களின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.

மே 10 ஆம் தேதி, பாகிஸ்தானில் உள்ள பல விமானநிலையங்களில் இந்திய விமானப்படை கடுமையாகத் தாக்கியபோது, பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, போர் நிறுத்தத்துகுக்கு முன்வந்தது. அப்போது, இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையுடன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம். எதிர்காலத்தில் பாகிஸ்தானின் தரப்பில் ஏதேனும் தவறு நடந்தால், இந்த நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படும்.

ஆபரேஷன் சிந்தூர் என்பது பிரதேசத்தைக் கைப்பற்றவோ அல்லது போரை தூண்டவோ தொடங்கப்படவில்லை, மாறாக சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கவும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்கவும் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பயங்கரவாதக் குழுக்களை ஒழிப்பதே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்.

எங்களின் ராணுவ நோக்கத்தை அடைந்ததால் போரை நிறுத்தினோம். எந்தவொரு அழுத்தத்தாலும் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்று கூறுவது ஆதாரமற்றது, முற்றிலும் தவறானது. எனது அரசியல் வாழ்க்கையில், நான் எப்போதும் பொய்களைப் பேசுவதில்லை” என்றார்

மேலும், “எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நமது விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்வி நமது தேசிய உணர்வுகளைப் போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். நமது ஆயுதப் படைகள் எத்தனை எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தின என்ற கேள்வியையே அவர்கள் கேட்க வேண்டும். இந்தியா எதிரிகளின் பயங்கரவாதத் தளங்களை அழித்ததா என்றால், பதில் ஆம் என்பதுதான். நீங்கள் ஒரு கேள்வி கேட்பதாக இருந்தால், இந்த நடவடிக்கையில் நமது துணிச்சலான வீரர்கள் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்பதுதான். இதற்கான பதில், இல்லை என்பதுதான். நமது வீரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x