Published : 28 Jul 2025 01:52 PM
Last Updated : 28 Jul 2025 01:52 PM
புதுடெல்லி: “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம்” என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம், ஓர் ஊடகப் பேட்டியில், “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? ஏன் நீங்கள்(அரசு) அவர்களைக் கைது செய்யவில்லை? ஏன் நீங்கள் அவர்களை அடையாளம் காணவில்லை? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 2 அல்லது 3 பேரை கைது செய்ததாக திடீரென்று ஒரு செய்தி வந்தது. இப்போது அது என்ன ஆயிற்று?
இந்த வாரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு என்ன செய்தது என்பதை வெளியிட அரசாங்கம் விரும்பவில்லை. பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அவர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்களா? நமக்குத் தெரிந்தவரை அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான அறிக்கையை பிரதமர் மோடி இதுவரை வெளியிடவில்லை என குற்றம் சாட்டிய ப. சிதம்பரம், போரில் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் வெளிப்படுத்தவில்லை என விமர்சித்தார். “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு உளவுத்துறை தோல்வி என்பதை நாங்கள் அறிவோம். 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலும் ஒரு உளவுத்துறை தோல்விதான். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று மும்பைக்குச் சென்ற நான், அங்கு அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்தித்தேன்.
அவர்கள் மத்தியில் நான் சொன்ன முதல் வாக்கியம், இது ஒரு உளவுத்துறை தோல்வி. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், பாகிஸ்தானைச் சேர்ந்த 7 அல்லது 8 பயங்கரவாதிகள் படகு மூலம் மும்பைக்கு வந்து நாட்டின் வர்த்தக தலைநகரை, நாட்டின் நிதி தலைநகரை குறிவைத்து தாஜ் ஹோட்டலுக்கு நடந்து சென்றிருக்கிறார்கள் எனில் இது உளவுத்துறை தோல்விதான்.
போர் என்ற வந்தால் இழப்புகள் இரு தரப்புக்கும் ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொன்னேன். இந்தியா இழப்புகளைச் சந்தித்திருக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், அவர்கள் இழப்புகளை ஒப்புக்கொள்ள தயங்குகிறார்கள். போரில் இழப்புகள் தவிர்க்க முடியாதவை., இயல்பானவை. எனவே, இழப்புகளை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆபரேஷன் சிந்தூரை ஒரு பெரிய விஷயமாக ஆக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது வேலை செய்யாது.” என தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, எதிரியை பாதுகாக்க காங்கிரஸ் ஏன் முயல்கிறது என கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மால்வியா, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை நமது படைகள் எதிர்கொள்ளும் போதெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவின் எதிர்க்கட்சி என்பதைவிட, பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாதிடும் வழக்கறிஞர்களைப் போலவே வாதிடுவது ஏன்?
தேசிய பாதுகாப்பைப் பொறுத்தவரை எந்த குழப்பமும் இருக்கக்கூடாது. ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எதிரியைப் பாதுகாக்க அவர்கள் எப்போதும் பின்னோக்கி வளைந்து கொடுப்பார்கள் என விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT