Published : 27 Jul 2025 06:01 AM
Last Updated : 27 Jul 2025 06:01 AM
புதுடெல்லி: டெல்லியில் பழைய வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடை நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதால், இந்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பபட்டன. பிஎஸ்-6 தரச்சான்றிதழ் பெற்ற வாகனங்கள் பிஎஸ்-4 வாகனங்களை விட குறைவான காற்று மாசுவை வெளியிடுவதால், 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்கள். 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் பழைய வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடை தொடர்பாக எந்த அறிவியல் ஆய்வும் நடத்தப்படவில்லை. இந்த தடை நன்கு பராமரிக்கப்படும் பழைய வாகனங்களையும், மோசமாக பராமரிக்கப்படும் பழைய வாகனங்களையும் வேறுபடுத்தவில்லை. பழைய வாகனங்கள் என்ற அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு நடுத்தர ரக மக்களை பாதிக்கிறது. அவர்கள் தங்கள் வாகனங்களை குறைவாக பயன்படுத்தி நல்ல நிலையல் பராமரித்து வருகின்றனர். நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பழைய வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைவான தூரமே ஓடுகின்றன. டெல்லியின் ஒட்டுமொத்த மாசுவுடன் ஒப்பிட்டால், பழைய வாகனங்களின் மாசு மிகவும் குறைவானவை.
மாசு கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டுள்ளது. இதனால் பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு காற்று மாசு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. சாலையில் ஒடுவதற்கு தகுதி என்பது தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயம். இது வாகனங்கள் வெளியிடும் மாசுவுடன் தொடர்பு படுத்தப்பட வேண்டும். இதற்குத்தான் தடை தேவை. ஒட்டுமொத்தமாக பழைய வாகனங்களுக்கு தடை விதிக்க கூடாது.
இவ்வாறு டெல்லி அரசு தனது மனுவில் கூறியுள்ளது. இந்த வேண்டுகோள் டெல்லி மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT