Published : 26 Jul 2025 08:30 AM
Last Updated : 26 Jul 2025 08:30 AM
புதுடெல்லி: பசுமை ரயிலை இயக்குவதற்கான கண்டுபிடிப்பில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை ஐசிஎப்-ல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா 1,200 எச்பி திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் இன்ஜின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது. இதன்மூலம் வருங்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்.
ஜீரோ கார்பன் உமிழ்வு நிலையை அடைய பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நாட்டின் போக்குவரத்தில் முதன்மையாக உள்ள ரயில்வேயில் ஹைட்ரஜன் இன்ஜினை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அந்த இலக்கை நாம் விரைவாக அடைய முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘பாரம்பரிய நகரங்களுக்கு ஹைட்ரஜன்’’ என்ற திட்டத்தின் கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு ரயிலும் ரூ.80 கோடி செலவிலும், ஒவ்வொரு பாதையின் கட்டமைப்பை உருவாக்க ரூ.70 கோடி செலவிடப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT