Published : 26 Jul 2025 07:53 AM
Last Updated : 26 Jul 2025 07:53 AM
புதுடெல்லி: மதங்களுக்கு இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தையை, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் தொடங்கி வைத்தார். டெல்லி ஹரியானா பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுமார் 50 முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபல், சிறுபான்மை பிரிவு தலைவர் இந்திரேஷ் குமார், இணை செயலாளர்கள் கிருஷ்ண கோபால் மற்றும் ராம்லால் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
முஸ்லிம்கள் தரப்பில் அகில இந்திய இமாம்கள் சங்க தலைவர் உமர் அகமது இலியாஸி ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் முஸ்லிம் வக்பு மசோதா குறித்த விவாதம் நடைபெற்றது. மேலும் மதத்தின் பெயரில் வாக்கு வங்கி அரசியல், கும்பல் படுகொலை, மதக் கலவரங்களுக்கு வித்திடும் தவறான செய்திகள் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும்விவாதிக்கப்பட்டன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் இலியாஸி கூறும்போது, ‘‘எங்கள் இமாம்கள் அமைப்பும் 50 ஆண்டு பொன் விழா கொண்டாடுவதால் இந்த கூட்டத்துக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். இந்து - முஸ்லிம்கள் இடையே ஒற்றுமை நீடித்தால் மட்டுமே நம் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறும்.
இதற்காக இரு மதத்தவர்கள் இடையே ஒற்றுமையை வளர்க்கும் பேச்சுவார்த்தைக்கு பாலமாக ஆர்எஸ்எஸ் செயல்பட விரும்புகிறது. அதன்படி, பேச்சுவார்த்தைதான் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் என்பது முதல் கூட்டத்தின் வழியாக புரிந்துள்ளது’’ என்றார்.
ஆர்எஸ்எஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் கூறும்போது, ‘‘இந்த கூட்டம் தொடர்ந்து நடைபெறும். நாட்டின் முன்னேற்றத்துக்காக இரு தரப்பினரும் ஒற்றுமையுடன் செயல்படுவது என்பதே இதன் நோக்கம். முதல் கூட்டம் சிறந்த பலனை அளித்துள்ளது’’ என்றார். இதற்கிடையில், இந்திய முஸ்லிம்களை பாஜக.வுடன் சேர்ப்பதற்குதான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது’’ என்று உ.பி. காங்கிரஸ் முஸ்லிம் எம்.பி. இம்ரான் மசூத் விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT