Published : 26 Jul 2025 03:27 AM
Last Updated : 26 Jul 2025 03:27 AM
புதுடெல்லி: ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் யுஎல்பிஜிஎம் - வி3 என்ற ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கியது. இந்த ஏவுகணை தயாரிப்பு அதானி மற்றும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த வகை ஏவுகணையில் வி1, வி2, வி3 என்ற மூன்று வகை ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் வழிகாட்டுதல், செயல்பாடு, தாக்கும் தூரம் ஆகிய விஷயங்களில் மாறுபாடுகள் உள்ளன.
இவற்றில் யுஎல்பிஜிஎம் - வி3 ஏவுகணை பெங்களூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏரோ இந்தியா 2025 கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஏவுகணையை ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள திறந்தவெளி சோதனை மையத்தில் டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
12.5 கிலோ எடையுள்ள இந்த ஏவுகணை ட்ரோன் மூலம் வானில் எடுத்துச் செல்லப்பட்டு ஏவப்பட்டது. இந்த ஏவுகணையை பயன்படுத்தி பகலில் 4 கி.மீ தூரம் உள்ள இலக்கையும், இரவில் 2.5 கி.மீ தூரமுள்ள இலக்கையும் தாக்க முடியும். நேற்று நடைபெற்ற பரிசோதனையில், யுஎல்பிஜிஎம் - வி3 ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக டிஆர்டிஓ தெரிவித்தது.
இதையடுத்து இந்த ட்ரோன் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்ட குழுவினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘யுஎல்பிஜிஎம் - வி3 ட்ரோன் ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது, நாட்டின் பாதுகாப்பு திறன்களுக்கு ஊக்குவிப்பை அளித்துள்ளது. இதன் தயாரிப்பில் தொடர்புடைய டிஆர்டிஓ மற்றும் தொழில் நிறுவனங்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பாராட்டுக்கள். இந்த வெற்றியின் மூலம் மிக முக்கியமான ராணுவ தொழில்நுட்பங்களை உருவாக்க இந்திய தொழில்துறை தற்போது தயார் நிலையில் உள்ளதை நிருபித்துள்ளது’’ என்றார்.
கர்னூலில் நடைபெற்ற ட்ரோன் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதை தொடர்ந்து. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தனது பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT