Published : 26 Jul 2025 01:53 AM
Last Updated : 26 Jul 2025 01:53 AM
புதுடெல்லி: மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி ஜூலை 28 முதல் மக்களவை வழக்கம்போல செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியால் 5-வது நாளாக நேற்றும் இரு அவைகளும் முடங்கின.
இதை தொடர்ந்து, மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய் உட்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
‘எதிர்க்கட்சிகள் கோரிய படி ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 28-ம் தேதி விவாதம் தொடங்க உள்ளது. எனவே, அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.
இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, 28-ம் தேதி முதல் மக்களவையில் இயல்புநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியபோது, “ஆபரேஷன் சிந்தூர் உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதன்பிறகும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் ஒரே ஒரு மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 28-ம் தேதி தொடங்கி வைப்பார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர், பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று பேசுவார்கள். பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு தரப்படும். பிரதமர் மோடி பதில் அளித்து பேசுவார். மொத்தம் 16 மணி நேரம் விவாதம் நடைபெறும்.
மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் 24-ம் தேதி தொடங்கும். அங்கு 9 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT