Last Updated : 25 Jul, 2025 06:31 PM

 

Published : 25 Jul 2025 06:31 PM
Last Updated : 25 Jul 2025 06:31 PM

தேஜஸ்வி யாதவை கொல்ல ஜேடியு - பாஜக சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

மகன் தேஜஸ்வி யாதவ் உடன் ராப்ரி தேவி

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய ஆளும் ஜேடியு - பாஜக கூட்டணி சதி செய்ததாக, அவரது தாயார் ராப்ரி தேவி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பிஹார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி கூறும்போது, "தேஜஸ்வியை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன. பிஹாரில் நிறைய கொலைகள் நடக்கின்றன. அதில் இதுவும் ஒரு கொலையாக இருக்கும். இதற்கான சதியில் ஈடுபட்டது, ஈடுபட்டுக்கொண்டிருப்பது ஆளும் ஜேடியு - பாஜக கூட்டணிதான். இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேஜஸ்வியை களத்தில் இருந்து அப்புறப்படுத்த அவர்கள் முயல்கிறார்கள். தேஜஸ்வியை கொலை செய்ய குறைந்தது நான்கு முறை முயற்சிகள் நடந்தன. ஒரு முறை ஒரு லாரி, அவரது வாகனத்தின் மீது மோதியது.

பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதை உணர்த்தவே தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து கொண்டு சட்டப்பேரவைக்கு வந்தார்கள். ஆனால், அவர்கள் கருப்பு உடை அணிந்து வந்ததால் முதல்வர் நிதிஷ் குமார் ஆவேசமானார். சிவப்பு நிறத்தைக் கண்டதும் காளைகள் ஆவேசமடைவதைப் போல, நிதிஷ் குமாரின் ஆவேசம் இருந்தது. கருப்பு உடை அணிந்து வந்ததில் என்ன தவறு? எங்கள் தரப்பில் தவறு இருந்தால் அதை அரசு நிரூபிக்கட்டும். நான் சவால் விடுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இண்டியா கூட்டணி சார்பில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் முன்னாள துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்து, சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லாத லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தப் பின்னணியில், பிஹார் சட்டப்பேரவையின் 5 நாள் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்தது. சட்டப்பேரவையில் ஆளும் கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே நேற்று வாக்குவாதம் அதிகரித்து மோதல் சூழல் ஏற்பட்டது. இதை பாதுகாப்பு படையினர் தடுத்தனர். பாஜக எம்எல்ஏ ஒருவர் சட்டப்பேரவை டேபிளில் இருந்த மைக்கை பிடுங்கி தேஜஸ்வி யாதவை தாக்க முயன்றதாக ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், அதை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x