Published : 25 Jul 2025 04:23 PM
Last Updated : 25 Jul 2025 04:23 PM
புதுடெல்லி: தாய்லாந்து - கம்போடியா இடையே ராணுவ மோதல் அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்தின் 7 மாகாணங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வரும் நிலையில், ஏதேனும் சில காரணங்களால் அந்த பிரச்சினை தீவிரமடைவதும் பின்னர் தணிவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இரு நாட்டு எல்லையில் ராணுவ மோதல் நிகழ்ந்து வருகிறது. கனரக ஆயுதங்கள், பீரங்கிகள் மற்றும் BM-21 ராக்கெட் அமைப்புகள் மூலம் கம்போடியப் படைகள் குண்டுகளை வீசுவதாக குற்றஞ்சாட்டியுள்ள தாய்லாந்து ராணுவம், தங்கள் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
இதனிடையே, இரு நாடுகளின் எல்லைகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறி வருகிறார்கள். தாய்லாந்தின் எல்லையில் வசிப்பவர்களில் 1.38 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில், பலர் அரசு ஏற்படுத்தி உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இரு நாட்டு ராணுவத்துக்கு இடையேயான மோதல் காரணமாக தாய்லாந்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 14 பேர் பொதுமக்கள் என்றும், ஒருவர் ராணுவ வீரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 பேர் காயமடைந்துள்ளதாகவும், இவர்களில் 15 பேர் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து ராணுவத்தின் தாக்குதல் காரணாக கம்போடியா எல்லையில் வசிக்கும் மக்களும் வெளியேறி வருகின்றனர். எல்லையிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கம்போடிய நகரமான சாம்ராங்கில் இருந்து பலரும் பொருட்களுடன் வாகனங்களில் வேகமாக வெளியேறி வருவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் உள்ள கம்போடிய தூதரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட தாய்லாந்து அரசு, கம்போடியாவில் உள்ள தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது. எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாடுகளும் அமைதி காக்க அமெரிக்கா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதனிடையே, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில், "தாய்லாந்து - கம்போடியா எல்லைக்கு அருகிலுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தாய்லாந்திற்குச் செல்லும் அனைத்து இந்தியப் பயணிகளும் TAT(Tourism Authority of Thailand) வெளியிடும் செய்திகளை அறிந்து முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தாய்லாந்தில் உள்ள உபோன் ரட்சதானி, சுரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சாந்தபுரி மற்றும் டிராட் ஆகிய 7 மாகாணங்களுகு்குச் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT