Published : 24 Jul 2025 05:01 PM
Last Updated : 24 Jul 2025 05:01 PM
பாட்னா: தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதைக் கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தகுதி வாய்ந்த எந்த வாக்காளரின் பெயரும் விடுபட்டுவிடக் கூடாது; அதேநேரத்தில் தகுதியற்ற எந்த வாக்காளரின் பெயரும் இடம்பெறவும் கூடாது என்பதே இதன் நோக்கம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான அறிவிப்பை கடந்த ஜூன் 24-ம் தேதி வெளியிட்ட தேர்தல் ஆணையம், தொடர்ந்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகிறது.
இந்நிலையில், பிஹார் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தி வருகின்றன. பிஹாரில் சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் கருப்பு சட்டை அணிந்து கொண்டு இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
மேலும், சட்டப்பேரவைக்குள் இந்த விவகாரம் தொடர்பாக கேள்விகளை எழுப்பி பிரச்சினை செய்தனர். சட்டப்பேரவைக்கு வெளியேயும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் உடனடடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி தேர்தலை புறக்கணிக்க தயங்காது. அதற்கான வாய்ப்பை நாங்கள் மூடிவிடவில்லை.
தேர்தல் வெற்றியாளர் யார் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும்போது, அப்படி ஒரு தேர்தலை நடத்துவதால் என்ன பயன் இருக்கிறது? பூத்-லெவல் அதிகாரிகள் வாக்காளர்கள் சார்பாக தங்கள் கையொப்பங்களையும் கட்டைவிரல் ரேகைகளையும் கணக்கெடுப்பு படிவங்களில் இடுகிறார்கள். படிவங்கள் குப்பை காகிதம் போல பயன்படுத்தப்படுகின்றன. இதனை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர். தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் அரசியல் கருவியாக செயல்படுகிறது.” என்று குற்றம் சாட்டினார்.
தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக கூட்டணியின் பிற கட்சிகளிடம் பேசப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த தேஜஸ்வி, “எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களிடமும் நாங்கள் பேசுவோம்.” என்று தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்த தெளிவுப் பார்வைக்கு வாசிக்க > பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: காரணங்களும் விமர்சனங்களும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT