Last Updated : 24 Jul, 2025 02:51 PM

9  

Published : 24 Jul 2025 02:51 PM
Last Updated : 24 Jul 2025 02:51 PM

“தப்பிக்க முடியும் என்று நினைக்காதீர்கள்” - தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி: “முறைகேடுகளைச் செய்துவிட்டு தப்பித்துவிட முடியும் என தேர்தல் ஆணையம் நினைத்தால் அது நடக்காது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்கள் அதற்குரிய தண்டனையை நிச்சயம் பெறுவார்கள்.” என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், சிவ சேனா (உத்தவ் பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா, திமுக எம்பி ஆ ராசா, சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியாவுர் ரகுமான் பார்க், திரிணமூல் காங்கிரஸ் எம்பி கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஏராளமான எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை 'ஜனநாயத்தின் மீதான தாக்குதல்' என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக முழு அளவில் விவாதம் நடத்த வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை முதலில் 2 மணி வரையும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையத்துக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தப்பிக்கப் போகிறீர்கள் என்று நினைத்தால், உங்கள் அலுவலர்கள் தப்பிக்கப் போகிறார்கள் என்று நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். நாங்கள் உங்களைத் தேடி வருவோம்.

கர்நாடகாவின் ஒரு தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையம் மோசடியை அனுமதித்ததற்கு 100% ஆதாரம் உள்ளது. அதனை நாங்கள் உங்களுக்கு காண்பிக்கும்போது, அதற்கான ஆதாரம் 100% இருக்கும். நாங்கள் ஒரு தொகுதியை மட்டுமே கவனித்தோம். அதில் இந்த மோசடியை கண்டுபிடித்தோம். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதிலும் சேர்க்கப்பட்டதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனை 100% நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட தொகுதியில் 50, 60, 65 வயதுள்ள ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி உள்ள வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ஆதாரங்களை நாங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவோம், அதன் விளைவுகளிலிருந்து நீங்கள்(தேர்தல் ஆணையம்) தப்பிக்க முடியாது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்கள் அதற்குரிய தண்டனையை நிச்சயம் பெறுவார்கள்.” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x