Published : 24 Jul 2025 10:23 AM
Last Updated : 24 Jul 2025 10:23 AM
டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்பப் பெறவும் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய சட்டம் இயற்றவும் அவர்கள் வலியுறுத்தினர்.
விவசாய அமைப்புகளின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் 2019 முதல் 2023 வரை வனவிலங்குகள் தாக்கியதில் 2,853 பேர் இறந்துள்ளனர். ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடு பெறுவதில் கடுமையான சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் நேற்று வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டம் குறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் ஈசன் முருகசாமி கூறும்போது, “இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன. இவை வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடியவை. மேலும் மனித உடலுக்கு தேவையான பல்வேறு சத்துகளை உடையவை. பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்தவை. ஆனால் மத்திய அரசு இவற்றை கவனத்தில் கொள்ளாமல் மரபணு திருத்தப்பட்ட 2 நெல் ரகங்களை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. விவசாயிகள் அதிக விலை கொடுத்து விதை நெல்லை வாங்குவதற்காக இது திணிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ள எவ்வித ஆய்வுகளும் இதில் நடைபெறவில்லை. இயற்கை வேளாண்மை, பாரம்பரிய ரகங்களை மேம்படுத்துதல், சிறுதானிய ஆண்டு என இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் அதே வேளையில் இதுபோன்ற இயற்கையை அழிக்கும் செயல்களை மத்திய அரசு அனுமதிப்பது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் மனு கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT