Published : 24 Jul 2025 03:00 AM
Last Updated : 24 Jul 2025 03:00 AM
காஜியாபாத்: போலியாக வேலைவாய்ப்பு நிறுவனம், போலீஸ் நிலையம், நீதிமன்றம் அமைத்து மோசடி செய்த செய்திகள்தான் இதுவரை வந்துள்ளன. ஆனால், போலி வெளிநாட்டு தூதரகத்தை உருவாக்கி ஒருவர் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் ஜெயின். இவர் காஜியாபாத் பகுதியில் 2 மாடிகள் கொண்ட சொகுசு மாளிகையை வாடகைக்கு எடுத்து அதில் வெஸ்ட்டார்க்டிகா நாட்டு தூதரகம் என்ற பெயரில் போலி தூதரகத்தை நடத்தி வந்துள்ளார்.
மேலும், அவரது தூதரக வளாகத்தில் விலை உயர்ந்த கார்களை நிறுத்தி வைத்துள்ளார். மேலும், தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் கார்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளை பொருத்தி நகரில் வலம் வந்துள்ளார்.
மேலும், அவரது அலுவலகத்தில் போலியான தூதரக பாஸ்போர்டுகள், பல்வேறு நாடுகளின் கரன்சிகள், பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் மார்ப்பிங் செய்யப்பட்ட ஹர்ஷ்வர்த்தனின் புகைப்படங்கள் இருந்துள்ளன.
அங்கிருந்தபடி வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை ஹர்ஷ்வர்த்தன் அனுப்பிக் கொண்டு இருந்தார். இது தவிர ஹவாலா மூலம் பண மோசடியிலும் ஈடுபட்டதாக தெரிகிறது. மத்திய புலனாய்வுத்துறை கொடுத்த தகவலின் பேரில் உத்தரபிரதேச சிறப்பு படை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி ஹர்ஷ்வர்த்தன் ஜெயினை அண்மையில் கைது செய்தனர்.
இதுகுறித்து உ.பி. சிறப்பு அதிரடிப் படை அதிகாரி சுஷில் குலே கூறும்போது, “செபோர்கா, பவுல்வியா மற்றும் லோடோனியா போன்ற சிறிய அங்கீகரிக்கப்படாத நாடுகளின் தூதரக பிரதிநிதி என்று ஜெயின் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். மேலும் வெஸ்ட் ஆர்க்டிகா நாட்டின் பெயரில் போலி தூதரகத்தையே நடத்தி வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
வெஸ்ட்டார்க்டிகா நாடு மிகவும் சிறியது ஆகும். அதனை இதுவரை எந்த நாடும் அங்கீகரித்தது கிடையாது. 2001-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கடற்படை அதிகாரி டிராவிஸ் மெக்ஹென்றி என்பவர் வெஸ்ட் ஆர்க்டிகாவை கண்டுபிடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT