Published : 24 Jul 2025 02:03 AM
Last Updated : 24 Jul 2025 02:03 AM
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவாதங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கின. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்த விவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதேபோல, மழைக்கால கூட்டத் தொடரின் 2-ம் நாளான நேற்று முன்தினமும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்துக்கு வெளியே இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து, பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், நாடாளுமன்றம் நேற்று 3-வது நாளாக கூடியது. பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்படுவது, ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதனால் கோபமடைந்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, தெருவில் போராட்டம் நடத்துவது போல எம்.பி.க்கள் நடந்து கொள்வதாக கண்டனம் தெரிவித்தார். மேலும், மக்களவை கேள்வி நேரத்தின் போது அவையின் மையப் பகுதியை பதாகைகளுடன் முற்றுகையிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் மக்களவை நேற்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால், மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்… மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், பிஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம், தலைநகர் டெல்லியில் குடிசைப் பகுதிகள் அகற்றம், விமானப் பயண பாதுகாப்பு, மேற்குவங்க புலம்பெயர் தொழிலாளர்கள் இதர மாநிலங்களில் பாகுபாடுடன் நடத்தப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவையில் விவாதிக்க 267-வது விதியின் கீழ் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அவை அனைத்தையும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நிராகரித்தார்.
இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ், மதிமுக எம்.பி. வைகோவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், அவரை பூஜ்ய நேரத்தில் பேச அனுமதிக்கும்படி கூறினார்.
இதையடுத்து, தமிழக மீனவர்கள், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படுவது குறித்து வைகோ பேசினார். ஆனாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நேற்று மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை மீண்டும் கூடியபோது, கேள்வி நேரம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். கேள்வி நேரம் தொடர அனுமதிக்கும் படி, மாநிலங்களவை தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த ஞான்ஷியாம் திவாரி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவை நேற்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட இதர எதிர்க்கட்சி தலைவர்களும் அமளியில் ஈடுபட்ட னர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் அப்போது அவையில் இருந்தார். மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடிய போது, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கப்பல் சரக்கு போக்குவரத்து தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிஹார் வாக்காளர் பட்டியல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அவையின் மையப்பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். பல ஒத்திவைப்புகளுக்கு பின்பும் அவையில் அமளி தொடர்ந்ததால், மாநிலங்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ராகுல் தலைமையில் போராட்டம்: பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்படுவதை திரும்ப பெறக் கோரி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் போராட்டம் நடத்தின.
இதில் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கையில் பதாகைகளுடன் கோஷமெழுப்பிய எம்.பி.க்கள், பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்வதில் அரசின் நோக்கம் என்ன, இது சட்டப்பூர்வமான நடவடிக்கையா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT