Published : 23 Jul 2025 07:45 AM
Last Updated : 23 Jul 2025 07:45 AM
புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் மூன்று ஏஎச்-64இ அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திடம் நேற்று ஒப்படைத்தது. இந்திய விமானப் படைத் திறனை நவீனமாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் வரவு பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவத்துக்கு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்காக, இந்திய அரசு மற்றும் போயிங் நிறுவனத்துக்கு இடையே ரூ.4,618 கோடிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த அப்பாச்சி ஏஎச்-64இ ரக ஹெலிகாப்டர் உலகின் அதிநவீன பன்முக போர்த்திறன் கொண்டதாக விளங்குகிறது. அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட பல நாடுகளின் ராணுவத்தில் இந்த ரக ஹெலிகாப்டர்கள் ஏற்கெனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நவீன ஆயுத அமைப்பு, இரவுநேர செயல்பாட்டு திறன், சிக்கலான போர் நடவடிக்கைகள் மற்றும் அனைத்து காலநிலைகளிலும் சிறப்பாக இயங்கக் கூடிய வகையில் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் ஆறு அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக மூன்று ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் போயிங் ஒப்படைத்துள்ளது. மீதமுள்ள மூன்று ஹெலிகாப்டர்கள் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டர்களை இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ராணுவத்தின் செயல்பாட்டுத் திறன்களை கணிசமாக வலுப்படுத்தும் என்று இந்திய ராணுவம் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் தெரிவித்து உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT