Published : 23 Jul 2025 07:31 AM
Last Updated : 23 Jul 2025 07:31 AM
திருமலை: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே திருமலையில் 3-வது க்யூ காம்ப்ளக்ஸ் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய தனி கமிட்டி அமைக்கப்படும். மேலும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் ஓய்வு அறைகள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இடங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும். அலிபிரி மற்றும் வாரி மெட்டு பாதைகளில் பக்தர்களுக்கு விளக்குகள், கழிப்பறைகள், பாதுகாப்பு என கூடுதல் வசதிகள் செய்து தரப்படும். திருமலையில் சிலா தோரணம், சக்கர தீர்த்தம் ஆகிய சுற்றுலா பகுதிகள் மேம்படுத்தப்படும். முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனைப்படி, உலகம் முழுவதும் ஏழுமலையான் கோயில்கட்ட நிபுணர் குழு அமைக்கப்படும்.
திருமலையில் சைபர் குற்றங்களை தடுக்க சைபர் செக்யூரிட்டி லேப் அமைக்கப்படும். திருமலையில் அனைத்து தேவஸ்தான துறைகளும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் திருமலை திருப்பதி நிர்வாக அலுவலகம் கட்டப்படும். வேதம் படித்த வேத பண்டிதர்களுக்கு வேலை கிடைக்கும் வரை ஊக்கத்தொகை வழங்க ஆந்திர அரசு முன்வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT