Published : 23 Jul 2025 07:01 AM
Last Updated : 23 Jul 2025 07:01 AM
பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு மண்டல அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குவாஹாட்டியில் இருந்து பெங்களூரு விமானத்தில் வந்த 2 இளம்பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர்களின் பெட்டியில் வழக்கத்துக்கு மாறாக, 40-க்கும் மேற்பட்ட சோப்புகள் இருந்தன.
அவற்றின் உறையை பிரித்து சோதித்தபோது, அதில் வெள்ளை நிற பொடி கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் சோதித்தபோது கோகைன் போதைப் பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக 7.5 கிலோ கோகைன் போதை பொருள் சிக்கியது.
அதனை உடனடியாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.14.69 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டதில் 24 வயதான பெண் மணிப்பூரை சேர்ந்தவர் எனவும், 26 வயதான பெண் மிசோரமை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இருவர் மீதும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், நேற்று பிற்பகல் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT