Published : 22 Jul 2025 04:03 PM
Last Updated : 22 Jul 2025 04:03 PM
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பிய அவர், அதன் நகலை குடியரசு துணைத் தலைவருக்கான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து, இன்று அவர் மாநிலங்களவைக்கு வருகை தரவில்லை. அவருக்குப் பதில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார்.
மாநிலங்களவை ஒத்திவைப்புக்குப் பின் ஹரிவன்ஷுக்குப் பதிலாக அவையை நடத்திய பாஜக எம்பி கன்ஷ்யாம் திவாரி, "குடியரசு துணைத் தலைவரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இது தொடர்பான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசியலமைப்பின் 67ஏ பிரிவின் கீழ் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74) நேற்று அனுப்பிய கடிதத்தில், “மருத்துவ ரீதியான காரணங்களுக்காக குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன். எனது பணியில் நான் கவனம் செலுத்த எனக்கு ஆதரவு கொடுத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பணியில் நான் பெற்ற அனுபவங்கள் மகத்தானது. இந்த பணி காலத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிவேக வளர்ச்சியையும் நேரில் கண்டு, அதில் பங்கேற்றதை பாக்கியமாக கருதுகிறேன். தேசத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சகாப்தத்தில் பணி செய்ததை கவுரவமாக கருதுகிறேன்.
இந்நேரத்தில் தேசத்தின் உலகளாவிய எழுச்சி மற்றும் தனித்துவமான சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அதன் எதிர்காலத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
அவரது ராஜினாமா ஏற்கப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், “நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் நாட்டுக்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று காலை தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு, ஜெகதீப் தன்கரின் ராஜினமா ஏற்கப்படும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தது. இந்த பின்னணியில், ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஜூலை 10-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் நீடிக்கப் போவதாகவும், அதன் பிறகே ஓய்வுபெற போவதாகவும், அதுவே சரியான தருணமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெகதீப் தன்கரின் அரசியல் பின்னணி: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1951 மே 18-ம் தேதி பிறந்தவர் ஜெகதீப் தன்கர். கடந்த 2003-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றிய தன்கர் 2022-ல் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT