Last Updated : 22 Jul, 2025 12:43 PM

 

Published : 22 Jul 2025 12:43 PM
Last Updated : 22 Jul 2025 12:43 PM

கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்கா உட்பட 6 நாடுகளிலிருந்து 610 தொல்பொருட்கள் மீட்பு: மத்திய அரசு

கஜேந்திர சிங் ஷெகாவத்

புதுடெல்லி: 2020 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து மொத்தம் 610 தொல்பொருட்கள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு நேற்று (ஜூலை 21) மக்களவையில் தெரிவித்தது.

இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வை மேற்கொண்டதா என்றும், கடந்த 5 ஆண்டுகளில் தொல்பொருட்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களவையில் கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அந்த பதிலில், ‘இந்திய தொல்லியல் ஆய்வு மையம் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் திருடப்பட்ட பொருட்கள் தொடர்பான வழக்குகளின் தரவுகளைப் பராமரிக்கிறது. 2020 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிலிருந்து மூன்று கலைப்பொருட்களும், இங்கிலாந்திலிருந்து ஐந்து கலைப்பொருட்களும் மீட்கப்பட்டன.

2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவிலிருந்து 157 தொல்பொருட்களும், கனடா மற்றும் இங்கிலாந்திலிருந்து தலா ஒரு தொல்பொருளும் மீட்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து 105 தொல்பொருட்களும், 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து 297 தொல்பொருட்களும் மீட்கப்பட்டன.

2020-24 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட மொத்த தொல்பொருட்களின் எண்ணிக்கை 559 ஆகவும், ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட தொல்பொருட்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது.

2020-24 ஆம் ஆண்டுக்கு இடையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகளில் இருந்து 610 தொல்பொருட்கள் மீட்கப்பட்டன. 1976-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 655 தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன’ என்று ஷெகாவத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x