Published : 22 Jul 2025 07:12 AM
Last Updated : 22 Jul 2025 07:12 AM
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்தகால ஆட்சியின்போது ரூ.3,500 கோடி மதுபான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெகன் கட்சியை சேர்ந்த ஒரு எம்பி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார். அப்போது, தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்தியது. அப்போது புதுப்புது ‘பிராண்ட்’ கள் புழக்கத்துக்கு வந்தன.
மதுபான கடைகளில் அனைத்தும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு பதில் வெறும் ரொக்கம் மட்டுமே பெறப்பட்டது. இதனால், கோடிக் கணக்கில் பணம் கை மாறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தவிர, மதுபானங்களும் மிகவும் தரமற்ற வகையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாறியதும், மதுபான விற்பனை ஊழல் குறித்து விசாரிக்க சந்திரபாபு அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. இக்குழு தீவிர விசாரணையை மேற்கொண்டு 305 பக்க முதற்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் ரூ.3,500 கோடி ஊழல் நடந்ததாக சிறப்பு விசாரணை குழு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இதில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது. மாதா மாதம் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை வசூலிக்கப்பட்டு, அப்பணம் முதல்வராக இருந்த ஜெகனுக்கு தனிப்பட்ட நபர்கள் மூலம் வழங்கப்பட்டதாக ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில், கேசிரெட்டி ராஜசேகரரெட்டி என்பவர் முதல் குற்றவாளியாகவும், இதற்கு மூளையாகவும் செயல்பட்டு உள்ளார். மதுபான ஊழல் பணத்தில் கடந்த 2024-ல் ஆந்திராவில் நடந்த தேர்தலுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி வரை சந்திரகிரி முன்னாள் எம்.எல்.ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி மூலமாக செலவிட்டுள்ளது.
மேலும், இந்த ஊழல் பணத்தில் துபாய், தென் ஆப்பிரிக்க நாடுகளில் 30 போலி நிறுவனங்கள் மூலம் தங்கம், ரொக்கம், சொகுசு பங்களாக்கள் மீது முதலீடு செய்துள்ளனர். இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு இதுவரை ஜெகன் கட்சியை சேர்ந்த ராஜம்பேட்டை எம்பி மிதுன்ரெட்டி உட்பட 12 பேரை கைது செய்துள்ளது.
ரூ.62 கோடி சொத்து பறிமுதல்: மேலும், ரூ.62 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் சிறப்பு விசாரணை குழு கைப்பற்றி உள்ளது. இது தொடர்பாக இதுவரை 268 சாட்சிகளையும் விசாரித்துள்ளது. ஆனால் இவை அனைத்துமே அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மக்களை திசை திருப்புவதற்காக சந்திரபாபு நாயுடு அரசு இவ்வாறு செயல்படுவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT