Published : 22 Jul 2025 06:54 AM
Last Updated : 22 Jul 2025 06:54 AM
மும்பை: கேரள மாநிலம் கொச்சியிலிருந்து நேற்று காலை மும்பைக்கு சென்ற விமானம் தரையிறங்கியபோது கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இன்ஜின் சேதமடைந்தது. ஏர் இந்தியா விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை காலை 9.27 மணிக்கு தரையிறங்கியபோது மழையால் ஓடுபாதை மிகவும் நனைந்த நிலையில் காணப்பட்டது.
இதனால் சற்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி அருகிலிருந்த புல்வெளியில் மோதியது. இதனால், விமானத்தின் வலதுபுற இயந்திரத்தின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மும்பை விமான நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறி்த்து ஏர் இந்தியா நிறுவனம் கூறுகையில், “விமானத்தை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சிறிய அளவிலான தாமதத்தை தவிர வேறு எந்த விமான சேவைகளுக்கும் இதனால் பாதிப்பு இல்லை. பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT