Last Updated : 21 Jul, 2025 07:09 PM

 

Published : 21 Jul 2025 07:09 PM
Last Updated : 21 Jul 2025 07:09 PM

பாஜக செய்வது மொழி பயங்கரவாதம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள் தின பேரணி

கொல்கத்தா: வங்க மொழிக்கு எதிராக பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள் தின பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, "வங்க மொழிக்கு எதிராக பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது. அக்கட்சி, மேற்கு வங்கத்தின் அடையாளம், மொழி, கலாச்சாரம், பெருமை ஆகியவற்றை அழிக்கத் துடிக்கிறது. வங்க மொழிக்கு எதிரான மொழி பயங்கரவாதத்தை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இங்கு தொடங்கப்படும் எதிர்ப்பு இயக்கம் டெல்லி வரை செல்லும்.

வங்காளிகள், வங்க மொழி ஆகியவற்றின் மீதான தாக்குதலுக்கு எதிரான இயக்கம் ஜூலை 27 தொடங்கப்படுகிறது. இது ஒரு வெகுஜன எதிர்ப்பு பிரச்சாரமாக மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வார இறுதியிலும் மேற்கு வங்கம் முழுவதும் பேரணிகள் நடத்தப்படும். வரக்கூடிய 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் நாம் கடந்த முறை பெற்றதைவிட அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு, பாஜகவை தோற்கடிக்க டெல்லிக்கு அணிவகுத்துச் செல்ல வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காளிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். என்ஆர்சி அறிவிப்புகள் முதல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது வரை வங்காளிகளுக்கு எதிராக அவர்களின் அடையாளத்தை அழிக்க பாஜக முயல்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காளிகள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். நான் பாஜகவுக்கு சவால் விடுக்கிறேன், உங்களால் எத்தனை பேரை சிறையில் அடைக்க முடியும்? அசாமில் உள்ள வங்காளிகளுக்கு என்ஆர்சி நோட்டீஸ் அனுப்ப அம்மாநில அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

மற்ற மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்துக்கு வந்து குடியேறியவர்கள் 1.5 கோடி பேர். இந்தியா முழுவதிலும் இருந்து வரும் மக்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பாஜக வங்காளிகளுக்கு என்ன செய்கிறது?

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறது. இரண்டும் சேர்ந்து மேற்கு வங்கத்துக்கு எதிராக சதி செய்கின்றன. பிஹாரில் எஸ்ஐஆர் மூலம் 40 லட்சம் வாக்காளர்களை, பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். அவர்கள், அதை மேற்கு வங்கத்திலும் செய்ய முயற்சித்தால் நாங்கள் அவர்களை சூழுவோம். ஒருபோதும் அதற்கு அனுமதிக்க மாட்டோம்.

பாஜக அவசர நிலைக்கு எதிராக பேசுகிறது. அதேநேரத்தில், நாட்டில் சூப்பர் அவசரநிலையை அமல்படுத்தி உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மேற்கு வங்கத்தில் வளர்ச்சி ஏற்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். கடந்த 11 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கூட உங்களால் எடுக்க முடியவில்லை. ஆனால், மேற்கு வங்கம் பற்றி நீங்கள் கனவு காண்கிறீர்கள்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x