Published : 21 Jul 2025 05:43 PM
Last Updated : 21 Jul 2025 05:43 PM
புதுடெல்லி: நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது, அனைவரும் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, அகிலேஷ் யாதவ் என ஏறக்குறைய முழு அவையும் நிரம்பி இருந்தது.
நாடாளுமன்றத்தின் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், டொனால்டு ட்ரம்ப்பின் கருத்து தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதை ஏற்க மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து அமளி நீடித்து வந்த நிலையில், சில உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை முன்வைத்தனர். எனினும், அமளி தொடர்ந்ததால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து, அவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. மீண்டும் அமளி காரணமாக அவை 2 மணி வரையும், பின்னர் 4 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “பாதுகாப்புத் துறை அமைச்சர் பேச அனுமதிக்கப்படுகிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் எவருக்கும் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை. இது ஒரு புதிய அணுகுமுறையாக உள்ளது. அரசுக்கு ஆதரவாக இருப்பவர்களாக இருந்தால் அவைக்குள் பேச முடியும். எதிர்க்கட்சி எம்பிக்களாக இருந்தால் பேச அனுமதி கிடைக்காது.” என தெரிவித்தார்.
ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாததற்கு அவரது தங்கையும் வயநாடு தொகுதி எம்பியுமான பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விவாதத்துக்கு அரசு தயார் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் அமைச்சர் கூறுகிறார். அப்படி எனில், எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும். அவர் பேசுவதற்கு எழுந்து நின்றார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நாங்கள் சபையை நடத்த விரும்புகிறோம். இது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் தனிப்பட்ட வரவேற்பு அறை அல்ல. அனைவரும் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அவர்கள் பாகிஸ்தானை ஆதரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதால், அவர்களே விவாதத்திலிருந்து விலகி ஓடுகிறார்கள். இந்தியாவை எதிர்ப்பவர்களுக்கு உதவுவதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால்தான் அவர்கள் நாடாளுமன்றத்தில் பொறுப்புடன் பேசுவதில்லை. அவர்கள் எந்த தலைப்பிலும் விவாதங்களை நடத்தலாம். அவற்றுக்கு பதில் அளிக்க அரசு தயாராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT