Last Updated : 21 Jul, 2025 04:55 PM

1  

Published : 21 Jul 2025 04:55 PM
Last Updated : 21 Jul 2025 04:55 PM

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு

வி.எஸ்.அச்சுதானந்தன் | Illustration by Satheesh Vellinezhi

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101.

இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக இருந்தவர். 2019-ஆம் ஆண்டு லேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு பொது வாழ்க்கையில் இருந்து அவர் விலகினார். அதன் பின்னர் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வி.அருண் குமாரின் இல்லத்தில் வசித்து வந்தார்.

அச்சுதானந்தனுக்கு கடந்த ஜூன் 23-ஆம் தேதி மூச்சுத்திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனை அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

யார் இந்த அச்சுதானந்தன்? - வி.எஸ்.அச்சுதானந்தன் குறித்து ‘இந்து தமிழ் திசை’யில் ‘கேரளத்தின் பொதுவுடமைத் தந்தை’ என்ற தலைப்பில் மண்குதிரை எழுதிய கட்டுரையில் இருந்து... பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வேர்விடத் தொடங்கி, இன்று விருட்சமாகக் கிளை பரப்பி நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றுடன் ஒப்பிடத்தக்கது

வி.எஸ்.அச்சுதானந்தனின் வாழ்க்கை. அவர் பிறந்த இரண்டாம் வருடத்தில்தான் எம்.என்.ராய் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கான விதையைத் தூவினார். பிறகு ‘கம்யூனிஸ்ட் சோஷலிஸ்ட் பார்ட்டி’ உதயமாகி, அது ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா’வான 1940-இல் வி.எஸ். அதில் அங்கமானார்.

ஆலப்புழை அருகே புன்னப்பராவில் பிறந்தவர் வி.எஸ்.அச்சுதானந்தன். தொழிலாளர் சங்க நடவடிக்கைகளில் முன்னின்றுசெயல்பட்டவர். கேரள கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடித்தளமிட்ட தலைவர்களில் ஒருவரான பி.கிருஷ்ணப்பிள்ளையின் உத்வேகத்தால் கட்சிக்குள் நுழைந்தவர். ஆலப்புழையில் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பை ஏற்றவர்.

கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வேர்பிடிக்கக் காரணமாக இருந்தது ‘புன்னப்பரா வயலார் எழுச்சி’ப் போராட்டம். புன்னப்பரா, வயலார் தொழிலாளர்கள் இணைந்து திருவிதாங்கூர் சமஸ்தானம் அறிமுகப்படுத்தவிருந்த அமெரிக்க மாதிரி ஆட்சி முறைக்கு எதிராக 1946-இல் நிகழ்த்திய போராட்டம் இது. கையில் கிடைத்ததை ஆயுதமாக ஏந்தி திருவிதாங்கூர் போலீஸ் படையை எதிர்கொண்ட தோழர்களில் வி.எஸ்.ஸும் ஒருவர். 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்ட இந்தப் போராட்டத்தில் வி.எஸ். கைது செய்யப்பட்டு, பூஜைப்புரை சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் கம்யூனிஸ்ட் எனச் சொல்லிக்கொள்வதற்கு அசாத்தியமான தைரியம் வேண்டும். அந்த நெஞ்சுரத்துடன் கட்சிப் பணியாற்றினார் வி.எஸ்.

சீனப் போரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முரண்பாடு உண்டானபோது தேசிய கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த 32 தலைவர்களில் ஒருவர் வி.எஸ். இப்படித்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது.

வி.எஸ். மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) கேரளச் செயலாளராக இருந்தவர். 2006-இலிருந்து கேரளத்தின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் மூன்று முறை செயலாற்றியவர் இவர். அந்தக் காலகட்டத்தில் கவியூர் வழக்கு, ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு, கிளிரூர் வழக்கு போன்ற பாலியல் பலாத்கார வழக்குகளின் நீதி விசாரணைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளார். இதற்காகப் பல முறை நீதிமன்றக் கதவுகளைத் தட்டியவர். இதனால், கேரளத்தில் தந்தை ஸ்தானத்தை வி.எஸ். பெற்றார்.

இது மட்டுமல்லாமல் லாட்டரி முறைகேடு, பார் முறைகேடு, மூணாறு ஆக்கிரமிப்பு போன்ற பல பொதுநலப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்தார். தனது இந்த உரத்த செயல்பாட்டால் சொந்தக் கட்சியாலும் பல முறை விமர்சிக்கப்பட்டுள்ளார்.

கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் தொண்டரான டி.பி.சந்திரசேகரன் 2012-இல் கொல்லப்பட்டார். நெய்யாற்றின்கரை இடைத்தேர்தல் நேரத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி சந்திரசேகரன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்று விமர்சனத்துக்கு ஆளானார் வி.எஸ். அந்தக் கொலையில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் குற்றம்சாட்டப்பட்டனர். கட்சியின் விமர்சனத்துக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் இன்றைய கேரள முதல்வர் பினராயி விஜயன், சந்திரசேகரனைத் ‘துரோகி’ என அழைத்ததைச் சுட்டிக்காட்டி வி.எஸ். பேசியது மீண்டும் விமர்சனத்துக்கு இடமானது.

பினராயியுடனான மோதல் போக்குக்குக் காரணம், கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சித் தலைவராக வி.எஸ். செயல்பட்டதுதான். திருட்டு லாட்டரி ஒழிப்பு, மூணாறு நிலம் ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற பல திட்டங்களைத் தனது ஆட்சிக் காலத்தில் வி.எஸ். நடைமுறைப்படுத்தி உள்ளார். ஐடி பூங்காக்களை அமைத்துள்ளார். கட்சி ஆளாகவும், ஆட்சியாளராகவும் இரு விதமாகச் செயல்பட்டவர் என்ற ஒரே பண்புக்காக வி.எஸ். விமர்சிக்கவும் பாராட்டவும்படுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x