Published : 21 Jul 2025 11:44 AM
Last Updated : 21 Jul 2025 11:44 AM
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நமது ராணுவ வீரர்களின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் என்று கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. ஆகஸ்ட் 21-ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு இந்த கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அதன் வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாடு ஒற்றுமையைக் கண்டது. நாடாளுமன்றத்தில் உள்ள தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்.
இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் வெற்றியைக் கொண்டாடுகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் ராணுவ வலிமையை முழு உலகமும் கண்டிருக்கிறது. ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100% நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கர அமைப்புகளின் தலைவர்களின் வீடுகள் 22 நிமிடங்களில் தரைமட்டமாக்கப்பட்டன.
பிஹாரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசும்போது, ஆபரேஷன் சிந்தூரின்போது நமது ராணுவம் தனது வலிமையை காட்டியது என அறிவித்தேன். இந்தியாவில் தயாரிப்போம் எனும் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை நான் சந்திக்கும்போதெல்லாம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை நான் கவனிக்கிறேன்.
இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்பியுள்ளார். இது இந்திய விண்வெளித் திறன்களின் அடையாளமாகவும் தேசிய பெருமையின் அடையாளமாகவும் மாறி இருக்கிறது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT