Published : 21 Jul 2025 10:27 AM
Last Updated : 21 Jul 2025 10:27 AM
திருவனந்தபுரம்: சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல. அதனால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சசி தரூரை புறக்கணிப்பதாகவும், அவரை உள்ளூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது கிடையாது என்றும் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.முரளிதரன் கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்கும் சசி தரூருக்கும் இடையிலான பிளவை பொதுவெளியில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்கும் குழுவுக்கு சசி தரூர் தலைமை வகித்தார். இதனால் அவர் மீது காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் முரளிதரன் இதனை கூறியுள்ளார்.
“எங்களில் ஒருவராக சசி தரூரை நாங்கள் பார்க்கவில்லை. தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரையில் நாங்கள் அவரை கட்சியின் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப் போவது இல்லை. அவர் எங்களுடன் இல்லாத காரணத்தால் அவரை புறக்கணிப்பது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அவர் மீதான நடவடிக்கை குறித்து கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்யும்” என கே.முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை அன்று கூறினார்.
முன்னதாக, கொச்சியில் நடைபெற்ற பள்ளி நிகழ்வில் பேசிய சசி தரூர், “தேசம் ஆபத்தில் இருக்கும்போது உங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அப்போதுதான் நாம் அனைவரும் வாழ முடியும். என் கருத்துப்படி, தேசம் முதலில் வரவேண்டும். கட்சிகள் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும். நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்தக் கட்சியின் நோக்கம் அதன் வழியில் சிறந்த இந்தியாவை உருவாக்குவதாகும்.
சித்தாந்தங்கள் அடிப்படையில் கட்சிகள் வேறுபடலாம் என்றாலும், அவை அனைத்தும் சிறந்த, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும். அரசியல் என்பது போட்டி நிறைந்தது. என்னைப் போன்றவர்கள் எங்கள் கட்சியை மதிக்கிறோம். ஆனால் தேசிய பாதுகாப்பு நலனுக்காக மற்ற கட்சிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் கூறும்போது, சில சமயங்களில் கட்சிகள் இதை விசுவாசமற்றதாக உணர்கின்றன. அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறுகிறது.
நமது ஆயுதப்படைகள் மற்றும் நமது அரசாங்கத்தை ஆதரிப்பதில் நான் எடுத்த நிலைப்பாட்டால் பலர் என்னை மிகவும் விமர்சிக்கின்றனர். ஆனால் இது நாட்டுக்கு சரியான விஷயம் என்று நான் நம்புவதால் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்.” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT