Published : 21 Jul 2025 07:35 AM
Last Updated : 21 Jul 2025 07:35 AM
மும்பை: மகாராஷ்டிராவில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறி, பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம், வஜாபூர் தாலுகாவில் உள்ளது ஷியூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கோயிலில் சஞ்சய் பகாரே என்பவர் சாமியாராக இருக்கிறார்.
தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முடியும், அகோரி பூஜை மூலம் குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பேறு கிடைக்க செய்ய முடியும், ஆவிகளை விரட்ட முடியும் என்றெல்லாம் கூறி வந்துள்ளார்.
இதுபோல் பல்வேறு மூட நம்பிக்கைகளை கடந்த 2 ஆண்டுகளாக பரப்பி வந்துள்ளார். தன்னை தானே ‘பாபா’ என்று அழைத்துக் கொண்டுள்ளார். அதை நம்பி ஏராளமான பக்தர்கள் அவரிடம் வந்தனர். அவர்களுக்கு ஆன்மீக சிகிச்சை அளிப்பதாகவும் பூஜை செய்வதாகவும் கூறி கம்பால் அடிப்பது, காலணிகளை வாயில் கவ்விக் கொண்டு கோயிலை சுற்றி ஓடிவர செய்வது போன்ற அத்துமீறல்களை செய்துள்ளார்.
அத்துடன் ஒரு கட்டத்தில் தன்னிடம் வருபவர்களை இலை, தழைகளை உண்ண சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். உச்சகட்டமாக தன்னுடைய சிறுநீரையே குடிக்க செய்திருக்கிறார். இதுகுறித்து கேட்டால் இவை எல்லாம் ஆன்மிக சிகிச்சையின் ஒரு அங்கம் என்று கூறி ஏமாற்றி வந்துள்ளார். தன்னிடம் வரும் ஆண், பெண் பக்தர்களை பாரபட்சம் இல்லாமல் சித்ரவதை செய்துள்ளார்.
இந்நிலையில் மூட நம்பிக்கை எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், ரகசிய கேமராக்கள் மூலம் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ நடத்தி சஞ்சய் பகாரேவின் அட்டூழியங்களை ஆதாரமாக சேகரித்தனர். அவற்றை போலீஸில் ஒப்படைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
அந்த அமைப்பினர் அளித்த வீடியோவில் ஒரு மனிதரை படுக்க வைத்து அவர் முகத்தின் மீது போலி சாமியார் சஞ்சய் தனது காலை வைத்து அழுத்துகிறார். பின்னர் அவர் முகத்தில் மஞ்சள் வண்ண பொடியை தூவுகிறார். இந்த பூஜைக்குப் பின்னர் அவரால் நிற்க கூட முடியவில்லை. சிலர் தாங்கி பிடித்துக் கொள்கின்றனர். ஆண், பெண்ணை சஞ்சய் கம்பால் அடிக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன, இதுகுறித்து போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT