Published : 20 Jul 2025 06:01 PM
Last Updated : 20 Jul 2025 06:01 PM
புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து குறித்து ஊகமான செய்திகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு மேற்கத்திய ஊடகங்களை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு வலியுறுத்தியுள்ளார். மேலும், கருப்புப் பெட்டியில் உள்ள தரவை இந்தியாவிலேயே வெற்றிகரமாக டிகோட் செய்ததற்காக விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தை (AAIB) அவர் பாராட்டினார்.
இதுகுறித்து பேசிய அவர், “ விமான விபத்து புலனாய்வுப் பணியகம் அனைவருக்கும், குறிப்பாக மேற்கத்திய ஊடக நிறுவனங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த ஊடகங்கள் ஊகமாக வெளியிடும் கட்டுரைகளில் தனிப்பட்ட ஆர்வம் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
நான் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தை நம்புகிறேன். அவர்கள் செய்யும் வேலையை நம்புகிறேன். முழு கருப்புப் பெட்டியையும் டிகோட் செய்து, இந்தியாவிலேயே தரவை வெளியிடுவதில் அவர்கள் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளனர். இது நமக்கு மிகப்பெரிய வெற்றியாகும். ஏனென்றால் முந்தைய சம்பவங்களில், கருப்புப் பெட்டியின் தரவுகளைப் பெற எப்போதும் வெளிநாடுகளுக்கு அவை அனுப்பப்பட்டன.
ஆனால், விமான விபத்து புலனாய்வுப் பணியகம் அனைத்தையும் வெற்றிகரமாக டிகோட் செய்திருப்பது இதுவே முதல் முறை. அதற்கான தரவு நம்மிடம் உள்ளது, முதற்கட்ட அறிக்கையும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இறுதி அறிக்கை வரும் வரை எந்தக் கருத்தையும் தெரிவிப்பது, நல்லதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம், அறிக்கையை முழுமையாகப் படித்து வருகிறோம். மேலும், பாதுகாப்பு அடிப்படையில் தேவையானதைச் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்த விபத்து குறித்த விசாரணையைப் பற்றி எதையும் சொல்வதற்கு முன் இறுதி அறிக்கைக்காக நாம் காத்திருப்போம்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT