Published : 20 Jul 2025 12:49 PM
Last Updated : 20 Jul 2025 12:49 PM
புதுடெல்லி: நாளை (ஜூலை 21) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இன்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் காரணமாக ஆகஸ்ட் 13 மற்றும் 14 தேதிகளில் மட்டும் அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கே. சுரேஷ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ், சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல், என்சிபி (சரத் பவார் அணி) எம்.பி. சுப்ரியா சுலே, பாஜக எம்.பி. ரவி கிஷன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், சமாஜ்வாதி கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பி மஹுவா மாஜி, “ஜார்க்கண்ட் மிகவும் பணக்கார மாநிலமாக இருக்க வேண்டியது, இம்மாநிலத்தில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. ஆனால் அது மூன்று ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, மத்திய அரசு ஜார்க்கண்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. எங்கள் மாநிலத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கவேண்டும்” என்றார்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் பதிலடி தாக்குதலுக்குப் பிறகு நடக்கும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இதுவாகும். இந்தியா - பாகிஸ்தான் போரை ட்ரம்ப் நிறுத்தியதாக கூறுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப உள்ளன.
வரவிருக்கும் கூட்டத்தொடரில், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் விதிகள் திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா, வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா, புவி-பாரம்பரிய தளங்கள் மற்றும் புவி-எலிக்ஸ் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT