Published : 20 Jul 2025 08:34 AM
Last Updated : 20 Jul 2025 08:34 AM
புதுடெல்லி: 2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மனதில் கொண்டு தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்காவில் 21-வது உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு பதக்கம் பெற்ற போலீஸாருக்கு பாராட்டு விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர், பதக்கம் பெற்றவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு பரிசுகளையும் வழங்கினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:
பதக்கம் வாங்கி நமது நாட்டை கவுரவப்படுத்திய அனைத்து போலீஸாருக்கும் பாராட்டுகள். அடுத்த உலக போலீஸ் விளையாட்டு விழா குஜராத் மாநிலம் அகமதாபாத், காந்திநகர், கெவாடியா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து போலீஸாரும், பதக்கம் பெறுவதை குறிக்கோளாக கொண்டு களமிறங்க வேண்டும். இந்த உலக போலீஸ் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 613 பதக்கங்கள் கிடைத்தன. அடுத்த போட்டியில் இந்த பதக்க எண்ணிக்கையை போலீஸார் முறியடிக்க வேண்டும்.
தற்போது பதக்கம் வென்ற போலீஸாருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.4.4 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம். எனவே, இந்தப் போட்டியில் வெற்றி பெறாதவர்கள் கவலைப்படக்கூடாது. அடுத்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை கைப்பற்ற வேண்டும்.
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. போட்டியை இந்தியாவில் நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். அதேபோல் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியையும் இந்தியாவில் நடத்த முயற்சி செய்து வருகிறோம்.
ஒலிம்பிக் போட்டியை மனதில் கொண்டு இந்திய விளையாட்டு வீரர்கள் 3 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து மாதந்தோறும் ரூ.50 ஆயிரத்தை வழங்கி வருகிறோம். தங்கள் விளையாட்டை மேம்படுத்திக் கொள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT