Published : 20 Jul 2025 01:30 AM
Last Updated : 20 Jul 2025 01:30 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ரோஹன் சல்டானா (42). ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தன்னை பெரிய கோடீஸ்வரராக காட்டிக்கொண்டுள்ளார்.
ரோஹன் சல்டானா பெங்களூரு, மங்களூரு, கோவா, மும்பை ஆகிய இடங்களை சேர்ந்த தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தருவதாகக்கூறி ஏமாற்றியதாக காவல் துறையில் புகார்கள் குவிந்துள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் மங்களூருவில் உள்ள ஜேபினமோகர் பகுதியில் விலை உயர்ந்த காரில் சென்ற ரோஹன் சல்டானாவை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரது பங்களாவுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மிகவும் ஆடம்பரமாக கட்டப்பட்டிருந்த அந்த பங்களாவில் விலை உயர்ந்த வாகனங்கள், ரகசிய அறைகள், ராசியான தாவரங்கள், ரூ.72 லட்சம் மதிப்புள்ள பழமையான வெளிநாட்டு மது வகைகள், விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், ரூ.35 லட்சம் ரொக்கம், 667 கிராம் தங்க நகைகள், ரூ.2.76 கோடி மதிப்புள்ள வைர நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ரூ.300 கோடி வரை மோசடி: இதுகுறித்து மங்களூரு போலீஸாரிடம் விசாரித்த போது, “ரோஹன் சல்டானா அரசியல் செல்வாக்கு மிகுந்த பெரிய தொழிலதிபர். தனது ஆடம்பர வாழ்க்கையின் மூலம் பெரும் தொழிலதிபர்களுக்கு நண்பராக மாறிவிடுவார். பின்னர் தொழிலதிபர்களுக்கு ரூ.50 கோடி முதல் ரூ.1000 கோடி வரை குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக ஆசை காட்டி, ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கமிஷன் வாங்குவார். கமிஷன் தொகையை வாங்கிய உடன், அங்கிருந்து தலைமறைவாகி விடுவார். இந்த வகையில் இதுவரை சுமார் ரூ.300 கோடி வரை அவர் மோசடி செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT