Last Updated : 19 Jul, 2025 06:39 PM

 

Published : 19 Jul 2025 06:39 PM
Last Updated : 19 Jul 2025 06:39 PM

‘போதைப் பொருள் இல்லாத இந்தியா’ பிரச்சாரத்தில் இணைவீர்: இளைஞர் ஆன்மிக மாநாட்டில் மத்திய அமைச்சர் அழைப்பு

இளைஞர் ஆன்மிக உச்சி மாநாட்டில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா.

புதுடெல்லி: போதைப் பொருள் இல்லாத இந்தியாவுக்கான பிரச்சாரத்தில் நாட்டு மக்கள் இணைய வேண்டும் என்றும், மத, சமூகத் தலைவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு இயக்கத்தில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார்.

'போதைப் பொருள் ஒழிப்பு' என்ற கருப்பொருளுடன் 2 நாள் இளைஞர் ஆன்மிக உச்சி மாநாடு வாரணாசியில் இன்று தொடங்கியது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டை துறையின் அமைச்சர் மன்சுக் மண்டவியா தொடங்கிவைத்தார். இந்த உச்சி மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 122 ஆன்மிக, சமூக - கலாச்சார அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய மன்சுக் மண்டவியா, "போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது நாட்டுக்கு மிகவும் முக்கியம். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், இளைஞர்கள் போதைப்ப ழக்கத்துக்கு ஆட்படக் கூடாது. நமது இளம் தலைமுறையினர் அரசு திட்டங்களின் பயனாளிகளாக மட்டும் இல்லாமல், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்து, நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் செயல்பட வேண்டும்.

போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது. போதைப்பொருள் நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையான சவாலாக அமைகிறது. இளைஞர்களிடையே போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வைப் பரப்ப மத, சமூகத் தலைவர்கள் தீவிரமாகப் பங்காற்ற வேண்டும். ஒவ்வொரு நபரும் குறைந்தது ஐந்து பேரையாவது போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் சேர ஊக்குவிக்கும் வகையில் ஒரு மக்கள் இயக்கம் நமக்குத் தேவை.

இந்த இரண்டு நாள் உச்சி மாநாடு மதிப்புமிக்க விவாதங்களுக்கும் அர்த்தமுள்ள முடிவுகளுக்கும் வழிவகுக்கும் என்று நம்புகிறேன். நாளை (ஜூலை 20) 'காசி பிரகடனம்' வெளியிட உள்ளது. இது இளைஞர்கள், ஆன்மிகத் தலைவர்களின் கூட்டுப் பார்வையையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் ஆவணமாக அமையும். இந்த ஆவணம் போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான விரிவான செயல் திட்டத்தை வழங்கும். போதைப் பொருள் ஒழிப்பிலும் மறுவாழ்விலும் பணிபுரிவோருக்கு இது வழிகாட்டும் சாசனமாக செயல்படும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x