Published : 19 Jul 2025 06:18 PM
Last Updated : 19 Jul 2025 06:18 PM
மைசூரு: அரசியல் சாசனத்தை அகற்ற பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் தினமும் முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மைசூரு மாநகர வளர்ச்சிக்கான ரூ.2,500 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் அரசு விழா மைசூருவில் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் தங்கள் செயல்பாடுகளை நிரூபிக்கிறார்கள். ஆனால், பாஜகவில் இருப்பவர்கள் பேச மட்டுமே செய்கிறார்கள்.
அரசியல் சாசனத்துக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் ஆல் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசியல்சாசனத்தை திருத்த அல்லது மாற்றப் பார்க்கிறார்கள். இதுபற்றி அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முயலலாம். ஆனால், அரசியல்சாசனத்தை மாற்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒருவேளை அரசியலமைப்பை மாற்ற அனுமதித்தால் பின்னர் மக்களுக்கு எந்த உரிமையும் இருக்காது.
அரசியலமைப்பு காரணமாக முதல்வராகவும் பிரதமராகவும் ஆனவர் நரேந்திர மோடி. நாடாளுமன்றத்தில் நுழையும்முன் நீங்கள் அரசியல்சாசனத்துக்கு தலை வணங்கினீர்கள். ஆனால், அதே மோடி தற்போது அரசியல் சாசனத்தை கொலை செய்கிறார். அரசியலமைப்பை அகற்ற பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் ஒவ்வொரு நாளும் முயல்கின்றன.
பிரதமர் மோடி தொடர்ந்து வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். 42 நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். ஆனால், நமது நாட்டில் பாதிக்கப்பட்ட மாநிலமான மணிப்பூருக்கு இதுவரை அவர் செல்லவில்லை. பிரதமரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT