Last Updated : 19 Jul, 2025 05:25 PM

1  

Published : 19 Jul 2025 05:25 PM
Last Updated : 19 Jul 2025 05:25 PM

‘என் குழந்தைகளை பராமரிக்க விழைகிறேன்’ - குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்ணின் முன்னாள் கணவர் கூறியது என்ன?

பனாஜி: கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பெண்ணின் முன்னாள் கணவர் ட்ரார் கோல்ட்ஸ்டீன், தங்களின் இரு மகள்களின் ஆரோக்கியம், மனநலம் பற்றி தான் அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த டிசம்பரில் அவர் போலீஸில் ஒரு புகார் அளித்துள்ளர். அதில் இவ்வாறாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ட்ரார் கோல்ட்ஸ்டீன் அளித்த காவல் துறை புகாரில், “நானும் நினாவும் 2017-ல் சந்தித்தோம். எல்லாம் நன்றாகவே சென்றது. ஆனால் சில காலத்தில் அவர் என்னிடமிருந்து விலக ஆரம்பித்தார். குழந்தைகளையும் என்னிடமிருந்து தள்ளியே வைத்தார்.

நினா எப்போதுமே குழந்தைகள் பள்ளி சென்று முறைப்படி கல்வி கற்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டியதில்லை. அவர் பள்ளிக்கூட கல்விக்கும், பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு எதிரான கருத்துகளையே கொண்டிருந்தார். ஒவ்வொருமுறையும் நான் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது பற்றி கூறும்போதும், ‘இந்தக் கல்வி முறையில் எனக்கு உடன்பாடில்லை’ என்றே கூறுவார்.

எனக்கு எனது மகள்களின் உடல்நலம், மனநலம் குறித்து அக்கறையுள்ளது. அவர்கள் இதுகாலம் வரை பள்ளி சென்றதில்லை. தாயுடனும் அவருடைய நட்பு வட்டாரத்துடனும் மட்டுமே பழகியுள்ளனர். அவர்கள் வயது கொண்ட குழந்தைகளுடன் பழகியதில்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நான் என் மகள்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். அவர்களுக்கு நிதி ரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பக்கபலமாக இருக்க விரும்புகிறேன். அதனாலேயே இந்தப் புகாரை அளிக்கிறேன்.

என் மகள்கள் எங்கு இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். நினா எப்பவு குழந்தைகளை மூளைச் சலவை செய்து என்னிடம் அண்டவிடாமல் செய்துவிட்டார்” என்று அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரை அவர் கோவாவின் பனாஜி காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் புகார் பற்றி செய்தி, ஊடகங்களில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

நினா மீட்கப்பட்டது எப்படி? - கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகேயுள்ள‌ ராமதீர்த்தா மலையில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் கடந்த 9-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்ட போது, நிலச்சரிவு அபாயம் மிகுந்த பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருப்பதை கண்டனர். அவரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் நினா குடினா (40) எனவும், அவர் தனது 2 மகள்களுடன் அங்கு தங்கியிருப்பதாகவும் கூறினார். இதையடுத்து 3 பேரையும் போலீஸார் பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை வழங்கினர்.

விசாரணை மேற்கொண்ட கோகர்ணா போலீஸாரிடம் நினா கூறியதாவது: நான் ரஷ்யாவைச் சேர்ந்தவள். 2016-ம் ஆண்டு சுற்றுலா பயணியாக கோவாவுக்கு வந்தேன். அங்கிருந்து கர்நாடகாவுக்கு வந்து கோகர்ணாவில் 3 மாதங்கள் தங்கியிருந்தேன். இங்கிருந்து நேபாளத்துக்கு சென்று, 2017ல் மீண்டும் கோகர்ணாவுக்கு வந்தேன். இந்த குகையை எனக்கு கடந்த‌ 8 ஆண்டுகளாக தெரியும்.

ஆன்மிகத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதால் உள்ளூர் சாமியார் ஒருவர் தியானம் செய்வதற்காக இந்த குகையை காட்டினார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது அவரிடம் இருந்து பிரிந்து வாழும் நிலையில், என்னுடன் மூத்த மகள் பிரேமா (6), இளைய மகள் அமா (4) உடன் இருக்கிறார்கள்.

என் மகள்க‌ளுக்கு தியானம் செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறேன். தினமும் ஆற்றில் குளித்துவிட்டு 3 பேரும் தியானம் செய்வோம். 10 நாட்களுக்கு ஒருமுறை ஊருக்குள் சென்று சாப்பிடுவதற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கி வருவேன். எனக்கு தேவையான பணத்தை உறவினர்கள் சிலரும், நண்பர்களும் அனுப்பி வைப்பார்கள். என்னிடம் செல்போன் இருந்தாலும், அதனை பெரிதாக பயன்படுத்த மாட்டேன்.

இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை தீண்டும்.” எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x