Last Updated : 19 Jul, 2025 02:50 PM

1  

Published : 19 Jul 2025 02:50 PM
Last Updated : 19 Jul 2025 02:50 PM

சூதாட்ட செயலி வழக்கு: கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத் துறை சம்மன்

புது டெல்லி: சூதாட்ட செயலிகள் தொடர்புடைய பணமோசடி வழக்கில், கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சூதாட்ட செயலிகள் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைக்காக ஜூலை 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு கூகுள், மெட்டா நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விசாரணை வளையத்துக்குள் உள்ள சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதில் கூகுள், மெட்டா ஆகிய டிஜிட்டல் தளங்களின் பங்கு குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. "கூகுள் மற்றும் மெட்டா தளங்கள், விளம்பரங்கள் மூலமாக சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி பயனர்களை சென்றடைய உதவுகின்றன" என்று அமலாக்கத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது

சட்டவிரோத சூதாட்ட செயலிகளான வி மணி, விஎம் டிரேடிங், ஸ்டாண்டர்டு ட்ரேடர்ஸ் லிமிட்டட், ஐபுள் கேபிட்டல் லிமிட்டட், லோட்டஸ் புக், 11ஸ்டார்ஸ் மற்றும் கேம்பெட் லீக் ஆகிய நிறுவனங்களை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தொடர்பான வழக்கில் மும்பையில் நான்கு இடங்களில் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.3.3 கோடி பணத்தையும், ஆடம்பர வாட்ச்கள், நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் சொகுசு வாகனங்களையும் அமலாக்கத் துறை சமீபத்தில் பறிமுதல் செய்தது.

முன்னதாக, சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உட்பட 29 நடிகர், நடிகைகள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x