Last Updated : 19 Jul, 2025 12:52 PM

 

Published : 19 Jul 2025 12:52 PM
Last Updated : 19 Jul 2025 12:52 PM

5 ஜெட் விமானங்கள் குறித்த ட்ரம்ப் பேச்சு: பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் போரின்போது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவில், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போரில் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதோடு, வர்த்தகத்தை முன்நிறுத்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதாக 24-வது முறையாகக் கூறியுள்ளார். ட்ரம்ப் இப்படி தொடர்ந்து சொல்லி வருகிறார், ஆனால் நரேந்திர மோடி அமைதியாக இருக்கிறார். வர்த்தகத்திற்காக நாட்டின் மரியாதையை நரேந்திர மோடி ஏன் சமரசம் செய்தார்?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூட இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ட்ரம்ப் ஏவுகணை 24-வது முறையாக ஏவப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்க இருந்த அணு ஆயுதப் போரை தடுத்து நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறி இருக்கிறார்.

மேலும், போர் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் வர்த்தகம் இருக்காது; அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பினால் போர் நிறுத்தத்துக்கு உடனடியாக ஒப்புக்கொள்ள வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும் கூறி இருக்கிறார்.

ட்ரம்ப் வெளியிட்டள்ள பரபரப்பான புதிய விஷயம் என்னவென்றால், 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறி இருப்பது.

கடந்த 2019 செம்படம்பரில் அமெரிக்காவில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சி, 2020 பிப்ரவரியில் நடந்த நமஸ்தே ட்ரம்ப் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் டொனால்ட் ட்ரம்ப் உடன் பல ஆண்டுகளாக நட்பையும் அரவணைப்பையும் பெற்று வருபவர் பிரதமர் மோடி. எனவே, கடந்த 70 நாட்களாக ட்ரம்ப் என்ன கூறி வருகிறார் என்பது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x