Published : 19 Jul 2025 12:57 PM
Last Updated : 19 Jul 2025 12:57 PM
புதுடெல்லி: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். இந்த நடவடிக்கை, மக்களின் குரலை நசுக்கும் என்றும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் தந்திரம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பாஜக அரசு சத்தீஸ்கரின் அனைத்து காடுகளையும் அதானிக்கு அர்ப்பணித்துள்ளது. காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன, PESA சட்டம் மற்றும் NGT உத்தரவுகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் இந்த பிரச்சினையை சட்டப்பேரவையில் எழுப்பவிருந்தார். இதை தடுக்கவே, அமலாக்கத்துறை அதிகாலையில் அவரது வீட்டை சோதனை செய்து அவரது மகனைக் கைது செய்தது.
கடந்த 11 ஆண்டுகளில், இது போன்ற நடவடிக்கைகள் மக்களின் குரலை நசுக்கவும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கவும் பயன்படுத்தப்படும் தந்திரங்கள் என்பதை நாடு தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளது. ஆனால் இதுபோன்ற தந்திரங்களால் உண்மையை அடக்கவோ அல்லது எதிர்க்கட்சிகளை மிரட்டவோ முடியாது. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் பூபேஷ் பாகேலுடன் உறுதியாக நிற்கிறார்" என்று தெரிவித்துள்ளார்
முன்னதாக, சத்தீஸ்கர் அரசு நடத்தும் மதுபானக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் நேற்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கர் முழுவதும் 750-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மாநில அரசு நடத்தி வருகிறது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது மதுபானங்களை கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இதன்பிறகு மதுபான ஊழல் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மாநில பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக சத்தீஸ்கரின் துர்க் மாவட்டம், பிலாய் நகரில் உள்ள முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு ராய்ப்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT