Published : 19 Jul 2025 06:44 AM
Last Updated : 19 Jul 2025 06:44 AM
புதுடெல்லி: கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா.
இவரது வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டபோது வீட்டின் ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூ.500 நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழு சமர்ப்பித்த அறிக்கையை தொடர்ந்து வர்மாவை பதவி விலகுமாறு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டுக்கொண்டார். ஆனால் வர்மா இதற்கு மறுத்துவிட்டார்.
இதையடுத்து விசாரணை அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிய சஞ்சீவ் கன்னா, வர்மாவை பதவி நீக்கும் நடைமுறைகளை தொடங்குமாறு பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில் வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வர்மாவுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பதவி நீக்க நடைமுறைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், “11 ஆண்டுகள் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதியாக களங்கமற்ற வாழ்க்கை. விசாரணைக்குழு பின்பற்றிய நடைமுறை தவறானது. என்னை தற்காத்துக் கொள்ள போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
விசாரணைக் குழு அமைக்கப்பட்டது ஒரு உள் நடைமுறை. அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்ப தலைமை நீதிபதிக்கு எந்த அதிகாரமோ அல்லது காரணமோ இல்லை. எனவே அவரது பரிந்துரை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT