Published : 18 Jul 2025 07:09 PM
Last Updated : 18 Jul 2025 07:09 PM
புதுடெல்லி: நரேந்திர மோடியின் தலைமை இருந்திருக்காவிட்டால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150 இடங்களில்கூட வெற்றி பெற்றிருக்காது என்று அக்கட்சியின் எம்.பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "நரேந்திர மோடி தற்போது 3-வது முறையாக பிரதமராக உள்ளார். மோடியின் தலைமை இருந்திருக்காவிட்டால், பாஜக 150 இடங்களில்கூட வெற்றி பெற்றிருக்காது. மோடி வந்தபோது, பாஜகவுக்கு அதுவரை வாக்களிக்காத பிரிவினர் குறிப்பாக ஏழை மக்கள், அதிக அளவில் பாஜக பக்கம் திரும்பினர். காரணம், அவர்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. சிலர் இதை விரும்பலாம் அல்லது விரும்பாமல் போகலாம். ஆனால், இதுதான் உண்மை.
அடுத்த 2029 நாடாளுமன்றத் தேர்தலையும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சந்திக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இருக்கிறது. பாஜகவுக்கு மோடி தேவை. கட்சியின் உறுப்பினராக பிரதமர் மோடியின் தலைமை மீது நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். சர்ச்சைக்குரியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதை கூறவில்லை. களத்தில் உள்ள யதார்த்தத்தை பிரதிபலிக்கவே இதை கூறுகிறேன்.
மோடியின் பெயர் மட்டுமே கட்சிக்கு வாக்குகளைக் கொண்டு வரும் என்பது அவரது தலைமை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்று. அவரது உடல்நிலை அனுமதிக்கும் வரை, 2047-க்குள் வளர்ந்த இந்தியா எனும் நமது இலக்கை அடைய அவரது தலைமை நமக்குத் தேவை
75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறி இருக்கலாம். ஆனால், மோடி அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவுக்கு அவர் தேவை. ஒருவர் ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், ஆனால் அரசியல் கட்சி தலைவரை மையமாகக் கொண்டே இயங்குகிறது. அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடியே தலைவராக இருப்பார். 15-20 ஆண்டுகளுக்கு அவரே தலைவராக இருப்பார் என்றே தெரிகிறது" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT